வியாழன், மார்ச் 25

வாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்?

ஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக மாற வேண்டிய அதிகார மையம் தன் சுயரூபத்தை வெளிகாட்டி ஆங்கில அதிகார மையம் கையாண்ட அதே நடைமுறையான பண்ணையார்கள்,ஜமீன்தார்கள் என இவர்களின் நலன்களில் மட்டுமே நாட்டம் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பிக்கின்ற காலகட்டம்.

தஞ்சை மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் மக்களின் ஜீவாதரமான தொழில் விவசாயம் இங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் விவசாய சங்கம் 1943 -ல் முதலில் திருத்திறைபூண்டியிலும் பின்பு ஆம்பலாப்பட்டிலும் என்று எங்கும் பரவலாக தொடங்கபடுகிறது. ஒடுக்கபட்ட மக்களின் தோழனாக நின்று அவர்களின் நலங்களுக்காக போரடிய கம்யூனிஸ்ட் இயக்கம் 1948 காலகட்டத்தில் தடைசெய்யபடுகிறது. இயக்கம் தடைசெய்யப்பட்டிருப்பினும் மக்கள் படுகின்ற கொடுமைகளை கண்டு தலைமறைவு வாழ்கை வாழ்ந்துகொண்டு அவர்களின் நலங்களுக்காக போரடுகின்றனர். விவசாயி என்று பெயரளவில் தான் இருந்தனர், நிலங்கள் இருந்தும் அதன் ஏகபோக உரிமையாளர்களாக ஜமீன்தாரும் அவர்களின் அடிவருடிகளும் தான் இருந்தனர். தினமும் காலை முதல் மாலைவரை செய்து கிடைக்கின்ற பலன்களில் பங்குதாரர்களாகவும்,உரிமையாளர்களாகவும் இருந்தனர் ஜமீன்தார்கள் மற்றும் அடிவருடிகள்.இந்த இழி நிலையை கண்டு அவர்களின் உரிமையினை பெற்று தர போரடி அதற்காக தன் உயிரையும் இழந்தனர் வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பாவான் ஒடை சிவராமன், இந்த தியாகிகளின் நினைவாக கட்டபட்ட நினைவுதூண் தான் பட்டுகோட்டை நகராட்சியால் இடிக்கபட்டுள்ளது.சாலை போக்குவரத்துக்கு இடைவூறாக இன்றும் எந்தனையோ அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் வழிபாட்டுதளங்கள் என்று எண்ணிலடங்கானவை உள்ளன.ஒவ்வொரு வருடமும் அதற்க்கு மரியாதை செலுத்த சாலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டாடுகின்றவர்களுக்கு இவர்களின் தியாகம் எவ்வாறு புரிந்திருக்கும்.


நவீனமாக்கபடபோகின்ற மயான கொட்டகைக்கு எந்த விதத்திலும் இடையூறு ஆகாத நினைவு தூண் இடிக்கப்ட வேண்டிய அவசியம் ஏன்? தன் முன்னோர்களின் சுயவுரிமை வாழ்வுக்காக போரடியதினால சுட்டுகொள்ளபட்ட இந்த தியாகிகளின் நினைவுகள் தற்போதைய தன் சந்ததிகளுக்கு தேவையில்லை என்று மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் முடிவெடுத்தனரா?.

என்னை போன்றவர்களுக்கு இன் நிகழ்வு இவ்வறாகத்தான் புரிய வைக்க முயற்சிக்கிறது அன்றைய காலகட்டம் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை தற்போதைய நிகழ்காலம் அவர்களின் தியாகத்தை புரிந்துகொள்ளவில்லை என்றே.


தியாகி ஆம்பல்.ஆறுமுகம் நினைவு தூண்.ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு.


தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் (கம்யூனிஸ்ட்) டாக்டர் வே.துரைமாணிக்கம் அவர்கள் ச.சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் 'ஆம்பல் ஆறுமுகம்' என்ற புத்தகத்திற்கு கீழ்வருவன போல் வாழ்த்துரை வழங்கியுள்ளார், அதை இங்கு குறிப்பிடுவது சரியானதாக இருக்கும் என்று கருதி பதிந்துள்ளேன்.


'கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் ஏ.கே.கோபாலன்,மணலி கந்தசாமி,பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை காட்டிகொடுக்க செம்பாளூரை சார்ந்த மிராஸ்தார் ஒருவர் முயற்சி எடுத்தார்.அவரின் முயற்சியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை கடுமையான வழக்காக மாற்றப்பட்டது.அதுதான் செம்பாளுர் வழக்கு.அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆம்பலாப்பட்டசேர்ந்வெ.அ.சுப்பையன்,எஸ்.ஏ.முருகையன்,டி.காசிநாதன்,வாட்டாகுடி இரணியன்,ஆறுமுகம் உள்ளிட்ட பலர்.தேடுதல் வேட்டையில் இரணியனும்,ஆறுமுகமும் வடசேரி என்ற ஊரில்காவல் துறையினரிடம் சம்பந்தம் என்கின்ற சதிகாரன் காட்டிகொடுத்ததால் அகப்பட்டுகொண்டார்கள்.05.05.1950 அன்று அதிகாலை சவுக்கு தோப்பில் மரத்தில் கட்டி வைத்து சிங்கநிகர்த் தோழன் இரணியனை சுட்டு வீழ்த்தினார்கள்.ஆறுமுகத்தை பார்த்து, மணலி கந்தசாமி இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு ஒடித் தப்பிதுகொள்.உன் மீது வழக்கு இல்லை என்று ஏமாற்றுகிறார்கள்.காக்கி சட்டைகாரர்களின் வஞ்சக எண்ணத்தை புரிந்து கொண்ட ஆறுமுகம், என்னை ஒடச்சொல்லி முதுகில் சுடப்பார்கிறாயா? ஓடினான் சுட்டேன் என்று கதை கட்டிவிட பார்க்கிறாயா? என் தலைவனை காட்டிக் கொடுக்கவும் மாட்டேன், முதுகு காட்டி ஓடவு மாட்டேன்.முதுகில் சூடுபட்டு சாக நான் கோழையல்ல.எனது கட்சிக்கும்,லட்சியத்திற்க்கும் நான் ஏற்றிருக்கும் மார்க்சிய,லெலினிய தத்துவத்திற்கும் இழக்கு ஏற்பட எள் முனையளவும் இடம் தரமாட்டேன்.கூலிப் பட்டாளமே எனது நெஞ்சில் சுடு என்று நெஞ்சை நிமிர்த்து காட்டினார்.துப்பாக்கி குண்டுகள்
நெஞ்சை துலைத்தன.திருமணமாகாத 22 வயதே நிரம்பிய அந்த புறட்சியாளன்,புரட்சி ஓங்குக! என்ற முழக்கத்துடன் பிணமானார்.அவரது உயிர் பிரிக்கபட்டது.அவரது உடல் அழிக்கபட்டது.அவரது லட்சியம் அழியவில்லை.அந்த மாவிரன் தொடங்கிய லட்சிய பயணத்தில் எண்ணற்றவர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள்.அவர்களில் நானும் ஒருவன்.தியாகி ஆறுமுகம் பிறந்த ஊரில் பிறந்தவன் நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.''


நானும் சொல்லிகொள்வதில் பெருமையடைகிறேன்.

ஞாயிறு, மார்ச் 21

காவேரி


காலம் தவறாத
நுறைகொண்ட
காவேரின் முதல்
துளி கண்ட
என் பாட்டண்
அள்ளிபருகி
ஆனந்தம் கண்டதாக
தந்தையின் பகிர்வு.

மாறிய பருவமும்
மறுக்கின்ற மனித
நேசமும் - அடிக்கொரு
ஆழ்துளை என்றானது.

பிரசவ கால
நினைவுகள்
பெண்களுக்கு
மட்டுமல்ல
என்
உடன்பிறப்புக்கும் தான்,
கலம் கண்ட
கதிர்களை
காணும்பொழுது.

காலம் கடந்தாவது
வந்துவிடு
வருடத்திற்கு
ஒருமுறை
உறிஞ்சப்பட்ட
என்
பூமியை
குளிர்விக்க
தாயே காவேரி.

படம்: இணையதளத்திலிருந்து .

வெள்ளி, மார்ச் 5

பாவிப்பதும் பின்பு பழிப்பதும்...


காவியுடை கதைகள் பல
கேட்டும்,படித்தும்,இப்போது
பார்த்தும்.

இருந்தாலென்ன...
அவமானப்படப்போவது
அடையாளப்படுத்தப்பட்ட
நாமல்லவா.

தினங்கள் மாறும்,
மற்றொருவர் வருவார்
அருள்பாவிப்பார்
கண்டேன் கடவுளை என்று
ஆராதிப்போம்.
பாவம் செய்ய பல வழிகள்,
சேர்த்துகொள்ளுங்கள் அதோடு
காவியுடையையும்.

பாவிப்பதும் பின்பு பழிப்பதும்
இயல்பாய் ஏற்றாகிவிட்டது,

உறைக்கின்ற உண்மைகள்
நடுகல்லாய் நட்டுருக்க,
தேடுங்கள் எதையோ
மனிதத்தை தவிர்த்து.