ஆம்பல் சார்ந்த தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆம்பல் சார்ந்த தகவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 4

ஆம்பல் தியாகி S.A.முருகையன் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி.




அரசியலின் மார்பில் நீர் எழுதியது

அடக்குமுறைக்கு எதிரான அறவழி.

தீண்டாமையின் திரைகளைச் சிதைத்தீர்,

தீக்கதிராய் சமத்துவம் விதைத்தீர்.


வென்றதில்லை ஆயுதம் உங்கள் கரங்களில்,

வெற்றியாய்த் திகழ்ந்தது உங்கள் வார்த்தைகள்.

உயிர் நீங்கினும், உயிர்களில் நீங்காத

உரிமைக்குரல் நீங்கள் என்றும்!


இன்று உங்கள் பாதையில் பலர் நடக்கிறார்கள்,

இணைமையாய் உங்கள் நினைவை ஏந்தி.

மண்ணும், மக்கள் மனமும் மறக்காது,

முருகையன் என்ற பெயர் ஒளியாய் வாழும் 🙏


தோழர்.சிவஞானம். 

ஆம்பலாபட்டு, கண்டியர்தெரு.

சனி, ஆகஸ்ட் 5

ஆம்பலாபட்டு தோழர் எஸ்.ஏ.எம் அவர்களை பற்றி 'தியாக பூமி' என்ற நூலில் இருந்து.


ஒன்றுபட்ட தஞ்சை மண்ணில், நிலபுரபுத்துவ ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நிகழ்ந்த போரட்டதில் சொல்லனா துன்பங்களை அனுபவித்து அடிதட்டு மக்களுக்கான சராசரி வாழ்வினை ஆதிக்க சக்திகளிடமிருந்து பெற்று தந்தனர் என்னற்ற தோழர்கள். அவர்களை பற்றிய வரலாற்று பதிவாக தோழர் மு.பாரதிமோகன் அவர்கள் எழுதியுள்ள ‘தியாக பூமி’ என்ற நூலில் இருந்து ஆம்பலாபட்டு தோழர் எஸ்.ஏ.எம் அவர்களை பற்றி..

 

 


 

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட, அவர்தம் வாழ்கையில் உயர்நிலை அடைய, சமுதாயத்தில் ஜாதி, மத இன பேதமற்ற சமத்துவ நிலைகொணர தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்ட்சியில் பதினாறு வயதிலேயே தன்னை இணைத்துக் கொண்டவர் எஸ்.எ.முருகையன்.

 

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தந்நாடு தாலுக்க, ஆம்பலாப்பட்டு கிராமம் இவரது சொந்த ஊர். இவரது தந்தை பெயர் அண்ணாமலை மாதுராயர். தாயார் பெயர் செல்லத்தமாள். முருகையன் 1926 ஆம் ஆண்டு பிறந்தவர். ஐந்தாம்வகுப்பு வரை படித்தவர். இவருடன் மாணிக்கதம்மாள்,மீனாம்பாள், செளபாக்கியம் எனற மூன்று சகோதரிகளும் பிறந்தனர்.

 

ஆம்பலாப்படு கிராமம் மதுக்கூர் ஜமின்தாருக்கு சொந்தமான கிராம்ம. ஜமிந்தாரின் நெருக்கடியால் விவசாயிகளும், தொழிளாலர்களும் சொல்லனா கொடுமைகளுக்கு ஆளாக்கபட்டனர். இதனை பார்த்த முருகையனுக்கு இளமையிலேயே இதனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் உதயமானது.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்பரையில் விவசாயிகள் சங்கம் தோற்றுவிக்க பட்டு தமிழகம் முழுவதும் அந்த செங்கொடி இயக்கம் பரவ ஆரம்பித்துத. 1943 ஆம் ஆண்டு ஆம்பலாப்பட்டிலும் எஸ்.ஏ.முருகையன், வெ.அ.சுப்பையா, கதிரேச மாதுராயர், வஸ்தாவி வைத்திலிங்கம், ராசு சேனாதிபதி, குழந்தைவேலு சேனாதிபதி, அய்யாவு சேனாதிபதி மற்றும் 15 இளைஞர்கள் கொண்ட முதல் கட்சி கிளை தொடங்கபட்டது. கதிரேசன் செயலாளராக தேர்வு செய்யபட்டார் மேல்கமிட்டி சார்பில் கே.பி. நடராஜன், மறவகாடு கிட்டு இவரும் கலந்து கொண்டனர்.

 

மதுக்கூர் ஜமின்தாரின் வரிவசூல், புறம்போக்கு நிலங்களை விற்பது விவசாயிகளிடம் மிரட்டி குடிவாரம் வசூலிப்பது இவைகளை எதிர்த்து ஆம்பலாப்பட்டு கம்யூனிஸ்ட்கள் போரடியதால் 1947 ல் கிராமத்தில் பெரும்பகுதி இளைஞர்கள் செங்கொடியின் கீழ் அணி திரள ஆரம்பித்தனர்.

 

முருகையன் வெட்டுவார்கோட்டை, ராமசாமி தேவர், மறவக்காடு கிட்டு கேபி,நடராஜன், இரணியன், முத்தையா, வெ.அ. சுப்பையா, மாசிலாமணி இவர்களுடன் இணைந்து செல்லதூர்வெட்டிகாடு, பின்னையூர், வடவாளம்,செங்கம்மேடு, பத்துக்தாக்கு, நெய்வேலி, வெங்கரை, கொல்லைகாடு, திப்பியவிடுதி,பூவாளுர் வரை விவசாய சங்கத்தைய்யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளையும் ஏற்படுதியவர்களில் முருகையனும் ஒருவர்.

 

ஆம்பலாப்பட்டு பேரவை கூட்டங்களில் மணலி சி.கந்தசாமி, கே.பி, நடராஜன், சிவராமன், இரணியன் மறவக்காடு கிட்டு ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

முருகையன் குடும்பம் நல்ல வசதிபடைத்த குடும்பம். அண்ணாமலை மாதுராயர் என்றால் ஆமபலாப்பட்டு மக்களே தனிமரியாதை கொடுப்பார்கள். இருபது ஏக்கர் நிலம் பம்பு செட் என வசதி படைத்தவராக வாழ்ந்து வந்தார். முருகையன் மட்டும்தான் ஆண் மகன் எனவே இளமைகாலத்திலேயே செல்வாக்குடன் வளர்ந்து வந்தவர் முருகையன்.

 

1947 ஆம் ஆம்பலாப்பட்டில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடந்தது. அதில் மணலி சி.கந்தசாமி, கேபி.நடராஜன், மறவக்காடு கிட்டு, இரணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

கம்யூனிஸ்ட் கட்சி மீது தடை விதிக்க பட்டது. ஆம்பலாப்பட்டு கிராமமே போலீஸ் தாக்குதளுக்கு உள்ளான கிராமம். 1949 ஆம் ஆண்டில் போலீசாரிடம் அடி வாங்கதா ஆண்களே இல்லை என்று கூட சொல்லாலாம். அந்ததளவுக்கு போலீசரால் கொடுமைபடுத்தபட்ட கிராமம். காரணம் மணலி கந்தசாமி, இரணியன், சிவராமன் தலைமறைவு வாழ்க்கை நடத்திய பகுதி எனபதனால் பெரிதும் சோதனைக்கு ஆள்பட்ட கிராமம் ஆம்பலாப்பட்டு.

செம்பாளூர் அய்யர் உணவு கொடுத்த கோனாரை போலீசிடம் காட்டி கொடுத்து விட்டு கம்யூனிஸ்ட்களை பிடித்து கொடுக்க முயற்சி செய்ததால்  அய்யர் வீடு தாக்கபட்டது. அதுவே செம்பாளூர் கலவரம் அதில் முருகையன் பங்கு பெற்று வழக்கிலும் சேர்க்கபட்டார்.

 

முருகையன் வீடு இடித்து தரைமட்டமாக்கபட்டது. ஆடு மாடுகளை எல்லாம் போலீசார் ஏலம் போட்டு எடுத்து சென்றனர். ஆவணி மாதம் வெயில் தாங்க முடியவில்லை காட்டுமிராண்டி போலீசார் முருகையனின் தாயாரையும் சகோதரிகளையும் சுடும்மணலில் நிற்க வைத்து அடித்து முருகையன் எங்கே சொல், சொல் என அடித்து கொடுமைபடுத்தினார்கள். மணல் கொதித்து கால் அடிபாகம் கொப்பளித்து போய்விட்டது. ஆனாலும் பரவாயில்லை தெரியாது? தெரியாது? என சொனார்களே தவிர வேறு எதையும் சொல்லவில்லை.

 

ஆம்பலாப்பட்டு குடிக்காட்டில் ஊர் மக்களை ஒரே இடத்தில் கட்டி வைத்து முட்டி போட வைத்து அடித்து கொன்டே இருக்கின்றனர். முருகையன் சகோதரியின் மகள் மூன்று வயது பெண் குழந்தை வயலில் பண்னை ஆட்கள் போர் செட்டில் உழுது கொண்டு நிற்கின்ற அவர்களை பார்த்து போய் கொண்டு இருந்த சிறுமி வயலில் கோடை காலத்தில் வெட்டபட்ட கிணற்றில் விழுந்து இறந்து பிணமாக மிதக்கின்றாள்.

 

சிறுமி கிணற்றில் மிதப்பதை பார்த்த பண்னையாட்கள் குழந்தையை தூக்கி கொண்டு சென்ற துயரகாட்சியை பார்த போலீசார் முருகையன் தாயையும் சகோதரிகளையும் அடிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். காங்கிரஸ் ஆட்சியின் போலீசார் அடக்குமுறைக்கு ஆறுமுகத்துக்கு முன்பே முருகையன் சகோதரி மகள் உயிர்தியாகம் செய்து ஆம்பலாப்பட்டு கிராமம் செங்கொடுயின் பிறபிடமாக மாற்றியது. அந்த சிறுமியின் உயிர் தியாகம்.

 

வீடு இடிந்து தரை மட்டமானது.குடியிருக்க இடம் இல்லை. சகோதரியின் மகள் கிணற்றில் விழுந்து  3 வயது சிறுமி மரணம். தாய் தந்தையை கட்டி வைத்து அடிகிக்கிறது போலீஸ் பட்டாளம். இப்படி கஷ்டமான நிலையிலும் முருகையன் தந்தை அண்ணாமலை மாதுராயர் மகனை பார்த்து உனக்குதானே இவ்வளவு சொத்தும் சேர்த்து வைத்துள்ளேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை உன்னை பெரிய வக்கீலைபிடித்து கோர்ட்டில் ஆஜர்ராக்குகிறேன் என சொன்னார். தந்தை சொல்வதை அமைதியுடன் கேட்ட முருகையன் அப்பா நீங்கள் சொல்வதிலும் ஒரு வகையில் நியாயம் இருக்கிறது இருந்தாலும் என்னை கண்டுபிடிக்கும்படி அரசாங்கம் போலீசை அனுப்பியுள்ளது.என்னை கட்சி ஆஜராக சொல்லவில்லை.தலைமறைவாக இருந்து கட்சி வேலை செய்ய வேண்டும் என்றுதான் முடிவு செய்துள்ளனர். ஆகையால் என்னால் கட்சி முடிவை மீற முடியாது எது நடந்தாலும் நடக்கட்டும் கவலைபடாதீர்கள் எனக் கூறினார்.

 

எனது சகோதரிகளை நல்ல மாப்பிள்ளைகளைபார்த்து அவர்களின் திருமணங்களை நல்லபடியாக செய்யுங்கள்.அதுவே எனக்கு நீங்கள் செய்யும் நல்ல காரியம். ஒன்றும் கவலைபட்டாதீர்கள் என முருகையன் சொன்னதைகேட்ட அண்ணாமலை மாதுராயர் கண்ணீர் சிந்தியபடி சென்றார்.

 

கட்சிதான் தனது உயிர் மூச்சு எனக் கட்டுபாட்டுடனும், நிதானமாகவும்,சாதுரியமாகவும் தலைமறைவுகாலத்தில் போலீசிடம் பிடிபடாமல் கட்டிபணி செய்தவர் முருகையன்.

 

முருகையனை காட்டி கொடுப்பவரக்ளுக்கு தக்க சன்மானம் வழங்கபடும் என போலீசார் அறிவித்தும் யாரும் காட்டிகொடுக்கவில்லை. ஜந்தாண்டு காலம் தலைமறைவு வாழ்கை நடத்திய முருகையன் 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ந் தேதி சென்னை உயர்நீமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.

 

முருகையன் சென்னை மத்திய சிறையில் 1 ½ ஆண்டுகள் அடைக்கபட்ட பிறகு சென்னை உயர்நீமன்றத்தால் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கபட்டது. சென்னையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார் முருகையன்.

 

மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்ட இருந்த தோழர்கள் ஆர்.நல்லகண்ணு,வ.மீனாட்சிநாதன், கே.பி.எஸ்.மணி, அழகமுத்து (நெல்லை) கிரிஷ்கோனார்(தூத்துக்குடி) பயிவான் அருணாசலம் (தூத்துக்குடி) டேவிட்.ராஜாமணி, கருப்பையா,மருதையன்(மதுரை)மொட்டையன் உட்பட 22 பேருடன் மதுரை சிறையில் வாழ்ந்தவர் முருகையன்.

 

மதுரை சிறையில் நடக்கும் கொடுமைகளைக் கண்டித்து கம்யூனிஸ்ட்கள் பத்து நாள் தொடர்ந்து நடந்த உண்ணாவிரத்திலும் கலந்து கொண்டவர் முருகையன். மதுரை மத்திய சிறையிலேயே படித்து எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதி தேர்வு பெற்றவர் முருகையன். 1957 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி மதுரை சிறையிலிருந்து விடுதலை அடைதார்.

 

ஒன்றுபட்ட பட்டுகோட்டை தாலுக்காவிலிருந்து 1958 ஆம் ஆண்டு ஒரத்தநாடு தாலுக்கா பிரிந்து முதல் மாநாடு ஊரணிபுரத்தில் வெட்டுவார் கோட்டை ராமசாமி தேவர் தலைமையில் நடந்துது.  மாவட்ட செயலாளர் எ.வி. ராமசாமி கலந்து கொண்டார். முதல் செயலாளராக எஸ்.எ.முருகையன் தேர்வு செய்யபட்டார்.

 

எஸ்.எ.முருகையன் (செயலாளர்) வெட்டுவார்கோட்டை ராமசாமி தேவர்,வெ.அ.சுப்பையா,தி.காசிநாதன், யூ.கோவிந்தசாமி பின்னையர், சேதுராஜன் பிள்ளை புதுவிடுதி, பா.கோவிந்தசாமி ஆகிறோர் ஒரத்தநாடு தாலுக்கா கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யபட்டனர்.

 

1960 ஆம் ஆண்டு முருகையன் திருமணம் நடந்தது. பிச்சையமாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். முருகையன் திருமணம் மணலி சி.கந்தசாமி தலைமையில் நடந்தது. மணமக்களை வாழ்த்தி எம்.காத்தமுத்து பேசினார். பிச்சையமாளின் தந்தை முருகையனை தலைமறைவு காலத்தில் பாதுகாத்தவர். செய்த உதவிக்கு நன்றி கடனாக பிச்சையம்மாளை தனது வாழ்கை துணைவியாக ஏற்று கொண்டார். இவர்களுக்கு அசோகன்,மகேந்திரன்,சாமிநாதன். ஹோசிமின் எனற அண்ணாமலை மற்றும் கண்ணன் என ஜந்து ஆண்களும் செல்லாநாயகி என்ற ஒரு பெண்ணும் உண்டு. ஜந்து புதல்வர்களும் கம்யூனிஸ்ட் கட்சி உருப்பிணர்களாகவே செயல்பட்டு வருவது பாரட்டுக்குரியது.

 

ஆம்பலாப்பட்டு கிராமத்தில் வாழ்கின்ற ஆதிதிராவிடர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்க்கும் சமுதாய அடக்குமுறைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் முன்நின்றவர் முருகையன்.

 

ஜமின்தார் வீட்டிற்க்கு பொங்கல் தினத்தில் பழம் அரசி தேங்காய்,காய்கரி,வாழை இலை இவைகளை கொண்டு சென்று கொடுத்துவிட்டு வணங்கி வருவது வழகம்.இதனை உலுப்பை கொடுப்பது என்று சொல்லவது வழக்கம். 

 

ஜமீன்தாருக்கு உலுப்பை கொடுப்பது இல்லை என்று  மாற்றிய பெருமை ஆம்பலாப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன்முன்னின்று போரடிய முருகையன், சுப்பையா, ஆறுமுக, காசிநாதன், கதிரேசன் போன்ற தோழர்களுக்கும் உண்டு.

 

முருகையன் பட்டுகோட்டை தாலுக்கா கமிட்டி உருப்பினராக, ஒரத்தநாடு வட்டார செயலாளராக, மாவட்ட விவசாய சங்க பொதுகுழு உருப்பிணராக, ஆமபலாப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராகவும் செயல்பட்டவர்.

 

கட்சி மாவட்ட மாநாடு,மாநில மாநாடுகள் பலவற்றில் பங்கு கொண்டவர்.விவசாய சங்க மாவட்ட மாநாடு,மாநில மாநாடுகளில் பிரதிந்தியாக கலந்து கொண்டவர் முருகையன்.

 

கட்சி அடக்குமுறை காலத்தில் 3 ½ வருடம் தலைமுறை வாழ்கையும் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தண்டிக்கபட்டு சென்னை, மதுரை சிறைகளில் 4 ½ வருடம் தண்டனையும் அனுபவித்தவர் முருகையன்.

 

எஸ்.எ.எம் எனத் தோழர்களால் அன்போடு அழைக்கபட்ட முருகையன் எப்போழுதும் அமைதியாகவும் நிதானத்துடனும் கொள்கைபிடிப்புடனும் செயல்படகூடியவர். அடக்குமுறைகாலத்தில் கடுமையான நெருக்கடியில் தனது குடும்பமே பாதிக்கபட்ட பொழுது மனம் தளராது, கொண்ட கொளகைக்காக உழைக்கும் மக்களை பாதுகாத்திடும் உன்னத லட்சியமான மார்க்சிய லெனினிய சித்தாந்தபாதையில் வெற்றிநடை போட்டு நடந்து வந்து இன்றும் லட்சிய வீரனாக நம்மிடையே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றவர் முருகையன். முருகையனைப் போன்ற தோழர்கள் காட்டிய பாதையில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கின்றது.அந்த லட்சியபாதையில் நாம் முன்னோக்கி செல்வோமாக!

வெள்ளி, மே 6

மே தின மற்றும் தியாகிகள் நினைவுநாள் பேரணி.

மே 1 உலகம் முழுவதும் கொண்டாடப்படும் உழைபாளிகளின் தினம் ஆம்பலாபட்டில் மே தின மற்றும் தியாகிகள் வாட்டாகுடி இரணியன்,ஆம்பல் ஆறுமுகம், ஜாம்பவான் ஒடை சிவராமன் இவர்களின் நினைவு தினமாகவும் மே 5-தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேரணி தியாகி ஆறுமுகம் நினைவு தூணிலிருந்து S.A.முருகையன் அவர்கள் கொடி ஏற்றி டாக்டர்.வே.துரைமாணிக்கம் அவர்கள் தொடங்கி வைக்க பேரணி ஆம்பலாபட்டு,முள்ளூர்பட்டிகாடு,நெய்மேலி திப்பியக்டி,பாப்பநாடு,கரம்பயம் வழியாக பட்டுகோட்டையில் நடைபெற்ற தியாகிகள் நினைவுதின பொதுகூட்டதிற்க்கு சென்றடைந்தது.




பொதுகூட்டத்தில் பேசிய தோழர்களில் ஆம்பல் வீ.கல்யாணசுந்தரம்,பட்டுகோட்டை பக்கிரிசாமி,கரம்பயம் அரங்க.சின்னப்பா ஆகிறோர் மூன்று தியாகிகளின் தியாகங்களை இன்றை இளைய தலைமுறை புரிந்துகொள்ள கூடிய வகையில் சிறப்பாக எடுத்துறைதனர்.


தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான தா.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்
பேரணியை பார்வையிட்டு சிறப்புரை நிகழ்தினார்.தியாகிகளின் சிறப்புகளையும்,தற்போதைய அரசியல் சூழ்நிலையையும் அவருகே உரித்தான ஆக்ரோஷதுடன் தொடங்கி, தி.மு.க தலைவர் கலைஞர்.கருனாநிதியின் 2G நிலைபாடு மற்றும் ஈழத்தில் தமிழின படுகொலையில் அவரின் போலிநாடம் போன்ற விசயங்களை மிக சிறப்பாகவும், விரிவாகவும் பேசினார். செங்கமலத்தாங்காடு பி.ஆர்.நாதன் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே பொது கூட்டம் சிறப்புடன் நிறைவு பெற்றது.

வெள்ளி, ஏப்ரல் 8

விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் மின்சாரதுறை ஊழியர்களை தண்டிப்பது யார்..?

தனி பட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு வித பிரச்சனைகள்..

ஆனால் ஒரு சமுகத்தை பாதிக்ககூடிய பிரச்சனை, விவசாயி சந்திக்ககூடிய விவசாய தொழில் சார்ந்த பிரச்சனைகள்.

தேர்தல் காலத்தில் கரைந்துபோகும் சில கதறல்கள் வெளி உலகுக்கு தெரிவதில்லை. அதை வெளி உலகுக்கு கொண்டு வந்தாலும் யாரும் அதை பொருட்டாக மதிப்பதும்மில்லை.

தஞ்சை மாவட்டத்தில் காவேரி பொய்தபோன பின் நவீன கால ஆழ்துளை கிணறுகள் தோன்றின,அதற்க்கு அரசு இலவச மின்சாரம் வழங்கி உணவு உற்பத்தியை பெருக்கிட முனைந்தன. நாளடைவில்லை மின்சார பற்றாகுறையினால் மின்வெட்டு என்று ஒரு நாளைக்கு 6 மணி நேரம் என்று கூறினார்கள்,மேட்டூர் நீர்வரத்து காலத்தில் பெருவாரியான விவசாயிகள் விவசாய தொழிலை செய்தாலும் பலன் மிக குறைவு,ஏனைனில் கடுமையான பருவநிலை மாற்றத்தினால் கலத்திற்க்கு வரவேண்டிய நெற்கதிர்கள் ஏனே மழை நீரில் அடித்து செல்லபடுவதும்,வயல்களில் கதிர்கள் அழிகிபோவதும் தஞ்சை மாவட்டம் மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாடிக்கையான ஒன்று

சம்பா விவாசயம் செய்யும் போது எந்தவிதமான இயற்கை சீற்றங்களுமின்றி ஆழ்துளை கிணறு உதவியின் மூலம் நெற்கதிர்கள் முழுவதும் வீடு வருவதும்
அதன் பலன் முழுமையாக விவசாயியை சாறுகின்றது. வருடம் முழுவதும் வயல்வெளிகலில் படும் கஷ்டம் இந்த சம்பா அறுவடையின் மூலம் கொஞ்சம் நிவர்த்திசெய்யபடுகின்றது. இந்த பயனை விவசாயிகள் உபயோகிக்க முடியாமல் மின்சாரத்தினை ஒழுங்காக 6 மணி விடுவதில்லை.பகுதி நடுஇரவிலும்,பகுதி
மாலையிலும் மொத்தமாக 4 மணி நேரத்திர்க்கு குறைவாக விடுகின்றனர்.

சரி விசயத்திர்க்கு வருவோம்,

ஒரத்தநாடு வட்டாரத்திர்க்கு உட்பட்ட மின்சார துறை ஊழியர்களின் அலட்சியம், பொருப்பின்மை மற்றும் ஆழ்துளை கிணறு விவசாயிகளின் அறியாமையை பயன்படுத்தி அவர்களிடம் பணம் பெருவது என முறையற்ற செயல்களில் ஈடுபடுவதினால் ஆழ்துளை கிணறு இருந்தும் செய்த சம்பா விவசாயத்தினை காப்பற்ற முடிவதில்லை.

மின்மாற்றி பழுதடைந்தால் ஊழியர்களின் அலட்சியத்தினால் குறைந்தது 15 நாட்களுக்கு மேல் காலம் கடத்துவது, பின்பு அதை தஞ்சாவுரிலிருந்து கொண்டுவந்து பொருத்துவது வரை செலவாகும் தொகையினை அழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடம் வசூல் செய்யபடுகின்றது. இது மின்சார துறையின் விதிகளின் கீழ் வருகின்றதா என எவருக்கும் தெரிவதில்லை. மின்மாற்றியில் ஏதேனும் சிறிது பழுதெனில் செய்துவிட்டு விவசாயிகளிடம் கையேந்தும் கீழ்தரமான பழக்கம்.

சமீபத்தில் எங்கள் பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம். சாலையோர திருப்பத்திலிருந்த மின்சார போஸ்ட் ஒன்று லாரி ஒட்டுனரால் சேதமாகிவிடுகின்றது.மின்சார துறை ஊழியர்களால் அந்த ஒட்டுனரிடமிருந்து நஷ்டயீடாக ரூபாய் 5000 வசூல் செய்யபடுகின்றது,பின்பு அப்பகுதியில் ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்களிடமிருந்து தலா ரூபாய் 300 - ம் வசூல் செய்யபடுகின்றது. இது போன்ற முறையற்ற நடவடிக்கையை மேல்அதிகாரிகள் கண்டிப்பதில்லை.

அரசியல்வாதிகள் தம் கடமையிலிருந்தும்,பொருப்பிலிருந்தும் தவறும் போது அடுத்து வரும் தேர்தலில் மூலம் அவர்களை தண்டிக்க கூடிய வாய்பினை மக்களாட்சி சாதரண குடிமக்களுக்கு தருகின்றது. ஆனால் அரசு துறையில் பொருப்பான பதவிகளில் இருந்து கொண்டு அப்பாவி மக்களுக்கு துரோகம் செய்யும் அதிகாரிகளையும்,ஊழியர்களையும் தண்டிப்பது யார்..? ஒரத்தநாடு மின்சார துறையின் ஒழிங்கினங்களை களைவது யார்..?




படங்கள்: ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு பகுதியில் சமீபத்தில் ஒரத்தநாடு மின்சாரதுறையின் அலட்சியத்தால் கருகிய பயிர்கள்.


வியாழன், ஜூலை 1

வாட்டாக்குடி இரணியனை பற்றிய ஒரு சிறு தொகுப்பு; ஜெயா தொலைகாட்சியின் 'கிரைம் டைரி'

அன்றைய பிரிக்கபடாத மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுகோட்டைக்கு அருகில் வடசேரி என்ற இடத்தில் காரல் மார்க்ஸின் பிறந்த தினமான மே 5தேதியில் சுட்டு கொல்லப்பட்ட வாட்டாக்குடி இரணியன்,ஆம்பலாபட்டு ஆறுமுகம் இவர்களை பற்றிய ஒரு சிறு தகவலாக ஜெயா தொலைகாட்சில் 'கிரைம் டைரி' என்ற நிகழ்ச்சியில் தொகுத்திருந்தனர்.இந்த பகுதியில் விவசாய தொழில் சார்ந்த மக்களை வாழையடி வாழையாக அடக்கி ஒடுக்கி அவர்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்துக்கொண்டிருந்த பண்னையார்களுக்கு எதிராக கொதித்தெழுந்து ஒத்த கருத்துடைய இளைஞர்களை பொதுவுடைமை என்ற உயர்ந்த தத்துவத்தின் கீழ் ஒருமுகபடுத்தி, போரடிய வாட்டாக்குடி இரணியன் என்ற மாவீரனை அதிகார மையம் வஞ்சகமாக 1950 மே 5 ல் சுட்டுக்கொன்றனர். வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாபட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பவான் ஓடை சிவராமன், இவர்களோடு இணைந்து போரடிய மற்ற தோழர்கள் பொதுவுடைமை இயக்க உயர்மட்ட குழு எடுத்த முடிவான மக்களாட்சி தத்துவத்தோடு இணைந்து போரடி ஒடுக்கபட்ட மக்களுக்கு சுயமரியாதை வாழ்வை பெற்று தருவதென என்று எடுத்த முடிவால், அதிகார மையத்திடம் சரணடைந்த இளைஞர்கள் கடுமையான சிறைதண்டனைக்கு பிறகு வெளிவந்து தாங்கள் கொண்ட கொள்கையின் பிடிப்பால் மக்களாட்சி தத்துவத்தோடு இணைந்து கிராமங்களில் தீண்டாமை ஒழிப்பு,நில சீர்திருத்த முறை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போரடி மாற்றத்தினை கண்டு இன்று வாழ்கையின் கடைசி கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிலரின் அனுபவத்தோடு ஜெயா தொலைகாட்சியில் அவ்வை மீடியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தனர்.இது போல் நிகழ்சிகளுக்கு நேரம் வழங்கிய ஜெயா தொலைகாட்சிக்கு எனது வாழ்த்துகள்.

ஒளி காட்சியை காண இங்கே சொடுக்கவும்.

சுதந்திர இந்தியாவில் தாங்கள் அடிமைகளாக வாழ்கிறோம் என்ற உணர்வினை உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தி, அவர்களுக்கு சுயமரியாதை வாழ்வினை பெற்று தருவதற்காக போரடி இறந்த இவர்கள் ஏற்படுத்திய மாற்றம்,இப்பகுதியின் இன்றைய மக்களின் சுயமரியாதை வாழ்க்கையின் அடிநாதம் என்றே குறிப்பிடலாம்.வாட்டாக்குடி இரணியனின் நெருங்கிய சகாக்களில் எனது தந்தையும் ஒருவர் என்று கூறிகொள்வதில் பெருமையடைகிறேன்.(நிகழ்சியின் க‌டைசியில் அனுபவத்தை பகிர்ந்துகொண்ட எஸ்.ஏ.முருகையன்)

ஞாயிறு, ஜூன் 13

தலைமுறை கடந்த ஆம்பலாபட்டு சின்னங்கள்.

ஒவ்வொரு கிராமங்களும் தங்களுக்கென தனிதன்மையான கலாச்சாரம்,காலம் கடந்து நிற்கும் வழிபாட்டு தலங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் என பல சிறப்புகளை கொண்டுள்ளன.மண்வாசனை மாறாத என் கிராமத்து சில சிறப்புகளை இணையத்தில் இணைத்திட ஒரு வாய்பாக கருதி இதை பதித்துள்ளேன்.




தியாகி ஆம்ப‌ல் ஆறுமுக‌ம் நினைவு தூண் (குடிக்காடு)


அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)


அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)


வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)


வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)


முத்துமாரிய‌ம்ம‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


க‌ங்க‌ளார் கோயில் (க‌ண்டிய‌ர் தெரு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)

முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)

வியாழன், மே 13

'களவாணி' திரைபட முன்னோட்ட காட்சிகள்.


படத்தினை க்ளிக் செய்து 'களவாணி' திரைபட முன்னோட்ட காட்சியை காணலாம்.

புதன், மே 12

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் III

அருள்வாக்கு,ஆசி வழங்குவது என்பன மட்டுமென்றி இதுபோல் பல பகுத்தறிவுக்கு எட்டாத சடங்குகள் மக்களின் வாழ்கைமுறையோடு ஒட்டி தவிர்க்க முடியாத சடங்குகளாக மாறிவிட்டன. பல வேத நூல்களை படித்து அதை முழுமையாக கிரகித்துகொண்டு மக்களின் வாழ்கை முறைக்கு தேவையான கருத்துகளை மட்டும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்துகின்ற பெரியோர்களை நமது முன்னோர்கள் மதித்து,போற்றினர். ஆனால் இன்றைய நிலை என்பது வேறு, ஆன்மிக சொற்பொழிவு செய்கிறவர்களையே நாம் கடவுளுக்கு இணையான நிலையினை கொடுக்க முயற்சிக்கிறோம்.அதன் பலன் நாம் தினந்தோறும் செய்திதாள்களிலும்,தொலைகாட்சிகளிலும் காண்கின்றோம்.இன்றைய நிலையில் ஒவ்வொரு இந்து மத ஆன்மீகவாதிகளும் ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு சமம் ஏனெனில் பொருளாதரதிலும் ஆகட்டும்,புகழில் ஆகட்டும் இவர்களே முன்னனி.


எனக்கு தெரிந்தவரை சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் வேத நூல்களை படித்து தெரிவாகி அதில் மக்களுக்கு தேவையான கருத்துகளையோ,ஆன்மிக சொற்பழிவோ,திறமையான மேஜிக்கோ செய்வதாக தெரியவில்லை.சராசரி நடுதர மக்களின் தேவையான கடவுள் பெயர் சார்ந்த ஆறுதல் இவைகளை ஏதோ ஒரு வடிவில் அவர்களின் தேவைகளை அறிந்து வெளிபடுத்துவதினாலும் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் போன்றோரின் வளர்ச்சி அதீதமாகபடுகின்றது.






ஆம்பலாபட்டு கிராம அரசியல் என்பது 1996-க்கு முற்பகுதிவரை முழுமையாக கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்கள் மட்டும் கோழோச்சி கொண்டிருந்தனர்.பிறகு ஏற்பட்டு சில மாறுதல்கள் கம்யூனிஸ்ட் இயக்கதவர்களை ஆம்பலாபட்டு வடக்கில் ஏற்படுகின்ற மாறுதல்களை வேடிக்கை பார்கிறவர்களாக மட்டுமே ஏற்படுத்திவிட்டது.இதனால் சில விமரிசனதிர்க்கு உட்பட்ட மாறுதல்கள் ஏற்பட்டன.இதில் அதீதமாக ஆன்மீகம் சார்ந்த மாறுதல் ஆகும்.ஆம்பலாபட்டு கிராமவாசிகள் சிரியவர் முதல் பெரியோர்வரை எல்லா விசயங்களையும் விமர்சிக்ககூடிய ஆற்றயுடையவர்,இந்த ஆற்றலை ஏற்படுத்திய பெறுமை பொதுவுடமை இயக்கத்தவர்களை சாரும்.


சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்ற தனிபட்ட மனிதரின் வாழ்கையில் ஏற்பட்ட மாறுதல் வேண்டுமெனில் அவரை மிக சிறந்த மனிதனாக மாற்றி இருக்கலாம்.அதன் பலன் பாழடைந்த சிவன் கோயில் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு பிறகு புதிப்பிக்கபடுகிறது,சில இளைஞர்கள் நல்லதொரு வழிகாட்டளுடன் ஆன்மிக பணி என்றொரு நிலை ஏற்படுகின்றது. இந்த நிலையை விமரிசனம் செய்வது என் நோகம் அல்ல இருப்பினும் இதுபோல் தன் பரிவாரங்களுடன்
செயல்பட ஆரம்பித்த ஆன்மீகசெயல்கள் தான் இன்று மடாலயங்கள்,ஆதினங்கள் என்று கூறிகொண்டு மூடபலக்கவழக்கங்களையும்,சாதிய கொடுமைகளையும் தாங்கிகொண்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்கின்றன, மக்கள் தன்நம்பிக்கையை விட கடவுள் நம்பிக்கையையும் அதன் மூலம் வருகின்ற செயல்களை தன் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற பெறும்மாற்றமாக கருதி வாழ்கின்றனர்.ஆகவே அவர்கள் அந்த நம்பிக்கைய கொண்டு சிறப்பான வாழ்க்கை வாழ சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்கின்ற மகேந்திரனின் செயல் ஊக்கமாக இருக்குமாயின் அதுவே அவரின் சிறப்பான ஆன்மீக பணியாக காலம் அவரை வாழ்த்தும், இவை தவிர்த்து உரையாடலிலும்,உருவத்திலும் தன்னை மாற்றிகொள்வதன் மூலம் ஆதின முறைக்கு மாறுகின்ற ஒரு வழியாக
கருத வேண்டியதில்லை.
 
 

முற்றும்.
-------------------------------------

வெள்ளி, ஏப்ரல் 23

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் II

இனக்கமான அரசியல் சூழ்நிலை,எல்லோரிடமும் காணபட்ட சகோதர உணர்வு இவைகளின் மூலம் தமிழீழ விடுதலை புலிகள் இரண்டுர கலந்திருந்த காலம் அது. கடற்கரை மைதானதில் மாலை நேரங்களில் எங்களுக்கு கால்பந்தாட்டம் கற்றுகொடுப்பது,அதற்கு பிரதிபலனாக அவர்கள் உருவாக்கிகொண்டிருந்த சிரிய ரக படகுகளுக்கு விடுமுறை நாட்களில் பலகை எடுத்து கொடுப்பது போன்ற சிறிய உதவிகளை செய்வது எங்களுடைய வழக்கம். அந்த சமயங்களில் அவர்களுக்கு தேவையான காய்கறி,பழம் மற்றும் இறைச்சி போன்றவறை வாங்குவதற்கு நண்பர் மகேந்திரன் தான் செல்வார். நியாயமாக நடப்பதினால் அவருக்கு நல்ல பெயர். ஒருமுறை நாங்கள் எப்போதும் போல் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தோம்,சிறிது நேரம் கழித்து மைதானமே பரபரப்பானது, ஏனெனில் மைதானத்தை நோக்கி ஒரு உருவம் வந்துகொண்டுருந்தது. தோள்களில் சிறிய வடிவிலான நீருக்கு அடியில் சுவாசிக்க கூடிய இரண்டு உருளைகளை சுமந்துகொண்டும்,கருத்த நிறமுடைய நீச்சல் உடையையும் அணிந்துகொண்டு அந்த உருவம் வந்துகொண்டிருந்தது. மைதானத்தை தாண்டியே அந்த உருவம் தென்னை தோப்புக்கு செல்ல முடியும். நாங்கள் விளையாடிகொண்டிருந்த பந்து அந்த உருவத்தின் பக்கமே இருந்தது அப்போது யாரும் எதிர்பார்கவில்லை அது நடக்கும்மென்று..வந்த உருவம் வேகமாக பந்தை உதைக்க அது நேராக எங்களோடு நின்றுகொண்டுடிருந்த ஒருவன் மேல் பட்டு அவன் நிலைகுழைந்து கீழே சாய்ந்துவிட்டான், இதை கவனித்த மகேந்திரன் நேராக அந்த உருவத்திடம் சென்று 'யோய் அறிவு இருக்காயா இப்படியா செய்வ?' என்றவாறே சண்டைக்கு நின்று விட்டார்.எங்களை போல் இன்னும் ஏராளம் இருந்தும் தைரியமாக அந்த உருவத்திடமும் மற்றவர்களிடமும் நடப்பது மகேந்திரன் மட்டுமே. இதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் தன்னிடமிருந்து வெளிவருகின்ற சொல் அல்லது செயல் தன்னை மிக பெரிய அளவில் பாதிக்கும் என்று தெரிந்தும் கூட தன்னை சார்ந்தவர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை கொண்டு அதை எதிர்த்து போராடும் குணம் அன்று மகேந்திரனிடம் நான் கண்டேன்.


வருடங்கள் கழிந்தன,சில நண்பர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் 'இப்போதெல்லாம் மகேந்திரன் சிவன் கோயிலில் தான் இருப்பது,அதுமட்டுமல்ல அருள்வாக்கு சொல்வதாகவும் அது கேட்டு வருகிறவர்களிடம் தனகென்று ஏதும் வாங்காது கோயில் வேலை நடைபெருகிறது ஆகவே அதற்கு தாங்களால் ஆன உதவிகளை செய்துவிட்டு செல்லுங்கள்' என்று கூறுவதாகவும் கேட்டதுண்டு. இந்த அருள்வாக்கு சொல்லும் பக்குவமும் அதை கேட்பவர்கள் நம்பிக்கையோடு ஏற்ககூடிய மனோநிலையும் ஏற்படுத்தகூடிய திறமை எங்கிருந்து வந்தது? வெவ்வேறான பகுத்தறிவுக்கு எட்டாத பதில்களே வருகின்றன. நகர்புறங்களில் நாம் பார்பதும்,கேட்பதும் உண்டு,திடிரென்று ஏதோ ஒரு இடத்தில் காவிவேட்டி கட்டிய சாமி அருள்வாக்கு சொல்வதாகவும் கூட்டம் அலைமோதுகிறது என்றும் பின்பு சில நாட்கள் கழித்து அது சாமி அல்ல ஆசாமி என்று தெரியவரும். ஆனால் கிராமபுறங்களில் இவ்வாறன நிகழ்வு நடைபெருவது சாத்தியமற்றது என்றே கருதுகிறேன், ஏனெனில் கிராமங்களில் பொதுவாக ஒருவரை பற்றி அறிமுகம் மற்றொருவருக்கு தேவையற்றது, ஒவ்வொருவருடைய அசைவுகளும் மற்றவர்களால் கண்காணிக்கபடும் ஆகவே அதே கிராமத்தை சார்ந்த நபர் நானும் அருள்வாக்கு சொல்கிறேன் என்று கூறுவாறேயானால் அதை முதலில் விமர்சிபது பக்கத்துவீட்டுகாரராகத்தான் இருபார்.இதையும் தாண்டி மகேந்திரன் என்ற சாதரண கிராமத்து இளைஞன் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்று அடைமொழியோடு ஆன்மீக நண்பர்களை வசீகரிப்பது இவரின் அருள்வாக்கா(?) பேச்சாற்றலா?



நினைவுகள் தொடரும்...

புதன், ஏப்ரல் 14

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் I

அனேகமாக 1987 அல்லது 88 காலகட்டம் என்று நினைக்கிறேன்,பள்ளிகூட மதிய உணவு இடைவேலையில் கருவேல மரநிழல் ஆதரவில் வீட்டிலிருந்து கொண்டுவந்த மோர்சாதத்தையும்,ஊருகாயையும் தொட்டுகொண்டு சாப்பிடும்போது, எங்களுக்கு எதிரே அடர்ந்து!படர்ந்த! ஆல மரம் அதை ஒட்டி ஆலமர நிழலில் புதைந்து காணபடும் பாழடைந்த சிவன் கோயில். இதை பற்றி தினமும் எங்களுக்குள் விவாதம் நடக்கும்.அந்த கோயிலுக்குள் பேய் ஒன்று குடிகொண்டுள்ளது என்றும் அதற்குள் யாரு போனாலும் கொன்று விடுமாம்! என்று தினமும் அந்த கோயிலை பற்றிய இது போன்ற கதைகள் அவரவர் கற்பனைக்கேற்ப கூறபடும்.பின்பு காலமாற்றத்தில் அதே சிவன் கோயில் மதில் சுவர்களிள் ஏறி நின்று கொண்டு எட்டி பார்பது உள்ளே என்ன உள்ளது என்று, ஆனாலும் உள்ளே செல்ல முயற்சிபதில்லை.

பொருள் தேடலின் போது இளைபாரிகொள்ள இரண்டு வருடத்திற்க்கு இரண்டுமாத தவனையில் வரும்போது கண்ட அந்த சிவன் கோயில் மாற்றம் தான் இந்த தலைப்பு.கடவுள் மறுப்போ அல்லது தனி நபர் துதிபாடுதலோ இல்லை.இந்த சிவன் கோயிலின் வெளிபுற மாற்றம் மட்டுமேயெனில் என் கண்களுக்கு தென்பட போவதில்லை,ஆன்மீக நாட்டமுள்ள இளைஞர்களின் ஒருகினைந்தசெயல்பாடு,அற்பனிப்பான உழைப்பு இவைகளின் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகி வருகின்றது. இந்த ஒருகினைப்பை ஏற்படுத்திய பெருமை சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளையே சாரும். யார் இந்த சுவாமிகள்.என் பார்வையில் 2000 வரை மகேந்திரன் என்ற சாதரண இளைஞன் தற்பொது ஆம்பலாபட்டு கிராம எல்லைகளையும் தாண்டி சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்ற அடைமொழியோடு வலம் வருவது வியப்பாக உள்ளது.





இன்றைய நிலையில் சிவன் கோயிலில் நடைபெறுகின்ற வேலையின் மதிப்பு சுமார் நான்கு கோடிக்கு மேல் என்று கூறபடுகிறது. இந்த நிதி என்பது முழுதாக சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளின் தனிபட்ட திரட்டுதல், இவ்வாறன நிதி மற்றும் ஆன்மீக நம்பிக்கையுடையவர்களின் ஆதரவினை எவ்வாறு பெறமுடிந்தது என்று இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழும், அதற்கு முன் இந்த சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் அதாவது மகேந்திரன் என்ற வழிகாட்டி நண்பனை பற்றிய எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

மல்லிபட்டிணம் எல்லோருக்கும் அறிந்திருக்கும் இடம் ஏனெனில் இங்கு வரலாற்று சிறப்பிடம் பெற்ற மனோரா உள்ளது. மனோராவை ஒட்டி சின்னமனை என்றொரு கடற்கரை கிராமம் இங்குதான் எனது ஜந்தாம் வகுப்பு தொடக்கம். ஊரில் நாங்கள் சரியாக படிபதில்லையென்றும்,எப்போதும் ஊர் சுற்றுவது என்று பெயர் பெற்றதினால் என்னோடு சேர்த்து இன்னும் சில பால்ய சினேகிதர்களோடு மனோராவை ஒட்டியுள்ள ஹொஸ்டலில் கடும் முயற்சிக்கு (?) பின் சேர்கபடுகின்றோம். எங்களை விட்டு வரும்போது எங்களுடைய பெற்றோர்கள் எங்களோடு சீனியரான ஒருவரை அழைத்து இவனும் நம் ஊர்தான் இனிமேல் இவன் சொல் படி கேட்டு நடக்க வேண்டும் என்று பொருப்பை ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிடுகின்றனர். அந்த சீனியர் தான் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்கின்ற மகேந்திரன்.

சரியாக ஒரு கல்வியாண்டு கூட முடிகவில்லை,அதோடு எங்களுடைய மல்லிபட்டிணம் ஹொஸ்டல் அனுபவம் முடிந்து விடுகின்றது. அங்கு எங்களோடு சேர்ந்து உண்டு,உறங்கி எங்களை சீனியராக இருந்து கவனித்துகொண்ட மகேந்திரன்தான இது என்று அவரின் சில புகைபடத்தை காணும் போது ஏற்படுகின்றது. மனோராவை ஒட்டி மிக பெரிய தென்னைதோப்பு அதற்குள் இலங்கையில் ஏற்படுகின்ற சிறு மாற்றம்கூட இங்கு சலசப்பை ஏற்படுத்தும் ஏனெனில் அதற்குள் தான் தமிழர்களை உலகறிய செய்த மாவீரர்கள் குடிகொண்டுருந்தனர்.



நினைவுகள் தொடரும்...

வியாழன், மார்ச் 25

வாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்?

ஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக மாற வேண்டிய அதிகார மையம் தன் சுயரூபத்தை வெளிகாட்டி ஆங்கில அதிகார மையம் கையாண்ட அதே நடைமுறையான பண்ணையார்கள்,ஜமீன்தார்கள் என இவர்களின் நலன்களில் மட்டுமே நாட்டம் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பிக்கின்ற காலகட்டம்.

தஞ்சை மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் மக்களின் ஜீவாதரமான தொழில் விவசாயம் இங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் விவசாய சங்கம் 1943 -ல் முதலில் திருத்திறைபூண்டியிலும் பின்பு ஆம்பலாப்பட்டிலும் என்று எங்கும் பரவலாக தொடங்கபடுகிறது. ஒடுக்கபட்ட மக்களின் தோழனாக நின்று அவர்களின் நலங்களுக்காக போரடிய கம்யூனிஸ்ட் இயக்கம் 1948 காலகட்டத்தில் தடைசெய்யபடுகிறது. இயக்கம் தடைசெய்யப்பட்டிருப்பினும் மக்கள் படுகின்ற கொடுமைகளை கண்டு தலைமறைவு வாழ்கை வாழ்ந்துகொண்டு அவர்களின் நலங்களுக்காக போரடுகின்றனர். விவசாயி என்று பெயரளவில் தான் இருந்தனர், நிலங்கள் இருந்தும் அதன் ஏகபோக உரிமையாளர்களாக ஜமீன்தாரும் அவர்களின் அடிவருடிகளும் தான் இருந்தனர். தினமும் காலை முதல் மாலைவரை செய்து கிடைக்கின்ற பலன்களில் பங்குதாரர்களாகவும்,உரிமையாளர்களாகவும் இருந்தனர் ஜமீன்தார்கள் மற்றும் அடிவருடிகள்.இந்த இழி நிலையை கண்டு அவர்களின் உரிமையினை பெற்று தர போரடி அதற்காக தன் உயிரையும் இழந்தனர் வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பாவான் ஒடை சிவராமன், இந்த தியாகிகளின் நினைவாக கட்டபட்ட நினைவுதூண் தான் பட்டுகோட்டை நகராட்சியால் இடிக்கபட்டுள்ளது.சாலை போக்குவரத்துக்கு இடைவூறாக இன்றும் எந்தனையோ அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் வழிபாட்டுதளங்கள் என்று எண்ணிலடங்கானவை உள்ளன.ஒவ்வொரு வருடமும் அதற்க்கு மரியாதை செலுத்த சாலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டாடுகின்றவர்களுக்கு இவர்களின் தியாகம் எவ்வாறு புரிந்திருக்கும்.


நவீனமாக்கபடபோகின்ற மயான கொட்டகைக்கு எந்த விதத்திலும் இடையூறு ஆகாத நினைவு தூண் இடிக்கப்ட வேண்டிய அவசியம் ஏன்? தன் முன்னோர்களின் சுயவுரிமை வாழ்வுக்காக போரடியதினால சுட்டுகொள்ளபட்ட இந்த தியாகிகளின் நினைவுகள் தற்போதைய தன் சந்ததிகளுக்கு தேவையில்லை என்று மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் முடிவெடுத்தனரா?.

என்னை போன்றவர்களுக்கு இன் நிகழ்வு இவ்வறாகத்தான் புரிய வைக்க முயற்சிக்கிறது அன்றைய காலகட்டம் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை தற்போதைய நிகழ்காலம் அவர்களின் தியாகத்தை புரிந்துகொள்ளவில்லை என்றே.


தியாகி ஆம்பல்.ஆறுமுகம் நினைவு தூண்.ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு.


தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் (கம்யூனிஸ்ட்) டாக்டர் வே.துரைமாணிக்கம் அவர்கள் ச.சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் 'ஆம்பல் ஆறுமுகம்' என்ற புத்தகத்திற்கு கீழ்வருவன போல் வாழ்த்துரை வழங்கியுள்ளார், அதை இங்கு குறிப்பிடுவது சரியானதாக இருக்கும் என்று கருதி பதிந்துள்ளேன்.


'கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் ஏ.கே.கோபாலன்,மணலி கந்தசாமி,பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை காட்டிகொடுக்க செம்பாளூரை சார்ந்த மிராஸ்தார் ஒருவர் முயற்சி எடுத்தார்.அவரின் முயற்சியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை கடுமையான வழக்காக மாற்றப்பட்டது.அதுதான் செம்பாளுர் வழக்கு.அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆம்பலாப்பட்டசேர்ந்வெ.அ.சுப்பையன்,எஸ்.ஏ.முருகையன்,டி.காசிநாதன்,வாட்டாகுடி இரணியன்,ஆறுமுகம் உள்ளிட்ட பலர்.தேடுதல் வேட்டையில் இரணியனும்,ஆறுமுகமும் வடசேரி என்ற ஊரில்காவல் துறையினரிடம் சம்பந்தம் என்கின்ற சதிகாரன் காட்டிகொடுத்ததால் அகப்பட்டுகொண்டார்கள்.05.05.1950 அன்று அதிகாலை சவுக்கு தோப்பில் மரத்தில் கட்டி வைத்து சிங்கநிகர்த் தோழன் இரணியனை சுட்டு வீழ்த்தினார்கள்.ஆறுமுகத்தை பார்த்து, மணலி கந்தசாமி இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு ஒடித் தப்பிதுகொள்.உன் மீது வழக்கு இல்லை என்று ஏமாற்றுகிறார்கள்.காக்கி சட்டைகாரர்களின் வஞ்சக எண்ணத்தை புரிந்து கொண்ட ஆறுமுகம், என்னை ஒடச்சொல்லி முதுகில் சுடப்பார்கிறாயா? ஓடினான் சுட்டேன் என்று கதை கட்டிவிட பார்க்கிறாயா? என் தலைவனை காட்டிக் கொடுக்கவும் மாட்டேன், முதுகு காட்டி ஓடவு மாட்டேன்.முதுகில் சூடுபட்டு சாக நான் கோழையல்ல.எனது கட்சிக்கும்,லட்சியத்திற்க்கும் நான் ஏற்றிருக்கும் மார்க்சிய,லெலினிய தத்துவத்திற்கும் இழக்கு ஏற்பட எள் முனையளவும் இடம் தரமாட்டேன்.கூலிப் பட்டாளமே எனது நெஞ்சில் சுடு என்று நெஞ்சை நிமிர்த்து காட்டினார்.துப்பாக்கி குண்டுகள்
நெஞ்சை துலைத்தன.திருமணமாகாத 22 வயதே நிரம்பிய அந்த புறட்சியாளன்,புரட்சி ஓங்குக! என்ற முழக்கத்துடன் பிணமானார்.அவரது உயிர் பிரிக்கபட்டது.அவரது உடல் அழிக்கபட்டது.அவரது லட்சியம் அழியவில்லை.அந்த மாவிரன் தொடங்கிய லட்சிய பயணத்தில் எண்ணற்றவர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள்.அவர்களில் நானும் ஒருவன்.தியாகி ஆறுமுகம் பிறந்த ஊரில் பிறந்தவன் நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.''


நானும் சொல்லிகொள்வதில் பெருமையடைகிறேன்.

வெள்ளி, நவம்பர் 27

'தோழர்கள்' நாடகம்.


எங்கள் மண் சார்ந்த சிறப்புகளை மக்கள் மன்றத்தில் முன்வைக்கும் தோழர்களுக்கு என் Red salute.

வாட்டாகுடி இரணியன் அதிகமான தோழர்களை கொண்டது எங்கள் கிராமத்தில்தான்.குறிப்பாக
வெ.அ.சுப்பையன்,எஸ்.எ.முருகையன்,காசிநாதன் மற்றும் பொதுவுடைமை இயக்கத்தின் ஈர்ப்பால் அடக்குமுறை காலத்தில் செஞ்சட்டை தோழர்களுக்கு உறுதுனையாக நின்ற ஆம்பலாப்பட்டு கிராம மக்கள்.அடக்குமுறை காலத்தில் மேற்குறிப்பிட்ட நபர்களை காட்டிகொடுக்க சொல்லி கொடுமைபடுத்தியதை இன்றும் எங்கள் கிராமத்து பெரியோர்கள் நினைவு கூறுவார்கள்.

'அண்டிபிழைக்காமல் வெள்ளையருக்கு எதிராக போராடி மடிந்தாலும் வாழையடி வாழையாக
இந்த போர்குணம் தொடர்கின்ற வரலாற்றை நாம் புரிந்துகொள்ள முடிகிறது' மிக சிறப்பாக
கூறி இருந்தார்கள்.வெள்ளையருக்கு எதிராக மற்றும் இவர்கள் அடையாளபடுத்துகின்ற விசயங்களுக்கு ஆதரவாக நாம் வெளிபடுத்தின்ற போர்குணத்தை பாரட்டி பதிவுசெய்கின்றவர்கள் ஏனோ இவர்கள் மறுகின்ற அல்லது அடிமைபடுத்த முயல்கின்றதற்க்கு துணை போகின்றவர்களுக்கு எதிராக போர்குணம் வெளிபடுத்தும் போது அடக்கி,ஒடுக்க முயல்கின்றனர்.

எனக்கு சில நேரங்களில் வியப்பாக இருக்கும், வளர்ந்த நாகரிகம் மற்றும் நவீன தகவல் தொழில்நுட்ப காலத்தில் இருந்துகொண்டு நாம் எங்கேயோ சந்தித்த,சந்திக்கின்ற அல்லது வலைதளத்தில் 'poor indians' என்று தட்டிவிட்டு நாம் காணும் காட்சிகளையும் நம் மனம் ஏற்றுக்கொண்டு பிழைக தெரியாதவர்கள் என்றும், விதி என்றும் நாம் நமது பணிகளில் மூழ்கிவிடுகிறோம்.ஆனால் அன்றைய எங்கள் கிராமத்து இளைஞர்களுக்கு
பொதுவுடைமைஇயக்க கொள்கைகளில் மீதிருந்த நம்பிக்கை, தன் பெற்றோர்,உறவுகளையும் தாண்டி அடக்குமுறைக்கு எதிராக போராடி சிறை சென்றனர். மேலாக தியாகி ஆறுமுகம் தன் தியாகத்தால் ஆம்பலாப்பட்டு பொதுவுடைமை இயக்க வரலாற்றில் நீங்காத இடம்பெற்றுக்கின்றார்.

தோழர் நாடகத்தை பற்றிய முழு விமர்சனம் கீற்று வலைதலத்தில் தமிழர் கண்ணோட்டம்
சிற்றிதழ் பகுதில் கணலாம்.

நன்றி: எனது கருத்துகளை பதிவு செய்த தமிழர் கண்ணோட்டம் சிற்றிதழ் மற்றும் 'தோழர்கள்' நாடகம் ஒர் அறிமுகம்(தந்தை பெரியார்)மூலமாக எனக்கு அறிமுகபடுத்திய தோழர்.தமிழவன்.

புதன், அக்டோபர் 28

ஆம்பலாப்பட்டில் கடந்த 1955 முற்பகுதியில் சமீன் மற்றும் சாதி எதிர்ப்பு பற்றி திரு.எஸ்.எ.முருகையன் அவர்கள்.



ஓளிகாட்சி பதிவு செய்யப்பட நாள் : மார்ச் 2002.

புதன், செப்டம்பர் 30

வாழ்த்துக்கள்,தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு.

ஆம்பலாப்பட்டு கல்வி அறக்கட்டளை நாளை 02.10.2009 தொடங்கபடுகின்றது என்று தோழர் கவிஞர்.செவ்வியன் (தலைவர் ஆம்பலாப்பட்டு கல்வி அறக்கட்டளை மற்றும் திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் சென்னை) மூலமாக அறியபொருகின்றேன்.நீண்ட காலத்திற்க்கு பிறகு இவ்வாறன நிகழ்சி நம் மண்ணில் நடைபெற இருக்கின்றது,என்னிடம் சில நண்பர்கள் எதிர்மறையான மற்றும் எப்பொழுதும் முன்வைக்கும் கருத்துக்களை தெரிவித்தார்கள்,அவர்களுக்கு ஒரே பதில் ஆம்பலாப்பட்டின் தலைமுறை மாற்றத்திற்க்கு முயற்சிக்கும் ஆர்வலர்களுக்கு நாம் நம்முடைய ஆதரவினை கொடுப்போம் என்றேன்.

இருப்பினும் என்னுடைய கருத்துக்களை என் இடுகளம் மூலமாக உங்களோடு பகிர்ந்துகொள்ளவிரும்பொகின்றேன்,இன்று நம்மை சுற்றியுள்ள கிராமங்களுக்குஒரு முன்மாதிரியான கிராமமாக விளங்கிகொண்டு இருக்கின்றோம், இம் மாற்றத்தினை ஏற்படுத்திய பொறுமை நம் முன்னோர்களையே சாரும் குறிப்பாக செஞ்சட்டை தோழர்களையே சாரும்.ஏனெனில் ஆம்பல் வரலாற்றில் பொதுவுடைமை இயக்கத்தின் பங்கு மிகப்பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியது என்று கூறுவதில் தவறில்லை என்று கருதுகிறேன்.

ஆகவே இந்த அறக்கட்டளையை ஒருங்கினைத்தவர்களும்,நிதி அளிப்போர்களும் இயல்பாகவே வரவேற்றிறுப்பார்கள்.என்னைபோல நூற்றுகணக்கான இளைங்ஞர்கள் தரமற்ற கல்வி மற்றும் மொழி பிரச்சனைகளால் அவதிபடுகின்றோம்,நம் மண்ணை பொறுத்தவரை பொருள் தேடல் என்பது இடம்பெயர்ந்தது அல்லது கடல் கடந்ததாகவே உள்ளது.வசதிபடைத்தவர்கள் குடிபெயர்ந்தும்,நடுத்தர குடும்பங்கள் நர்சரி பள்ளிகளுக்கும் அனுப்பி போலியான வளர்ச்சிக்கு தயார்படுத்திகொள்கின்றனர். ஒரு சிறு சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்,நான் கடந்தமுறை விடுமுறையில் சென்றபோது கண்டது, விவசாய குடும்பம்,இரண்டுகுழந்தைகள்,ஆணொன்று,பெண்ணொன்று,தினமும் அதிகாலையில் எழுந்து நீரட செய்து,காலை சிற்றுண்டி மற்றும் அனைத்தும் செய்து காலை மணி 06.45 தயார்படுத்திடுவாள் நர்சரி பள்ளிக்கு அன்னை, ஆனால் பெண்ணோ அதுவாகவே தயார்படுத்திகொண்டு செல்லும் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு,இரண்டு குழந்தகளுக்கும் வயது வித்தியாசம் இரண்டுக்குள்தான் இருக்கும் என்று கருதுகிறேன்,நான் ஒரு நாள் அந்த அன்னையிடம் வினாவினேன் அதற்க்கு 'இவள் படித்து ஒன்றும் ஆகபோவதில்லை ஆனால் அவன் படித்தால் எங்காவது போய் எங்களை காப்பாற்றுவான்' என்று கூறி சென்றார்கள். இது நமது கிராமத்தில் மட்டுமல்ல பரவலாக காணபடுகின்ற சாதரண ஒரு நிகழ்வு. மேற்குறிப்பிட்ட இந்த நிகழ்வு ஒரு சமூக பிரச்சனையாகவே கருதுகிறேன்.குழந்தை பருவத்திலேயே கற்ப்பிக்கபடுகிறது நீ இதற்க்கு தகுதியுடையவன், நீ இதற்க்கு மட்டும் தான் தகுதியுடையவள் என்று,

ஆலயங்கள் பல எழுப்பி அதில் தம் அடையாளங்களை பதித்தனர் நமது முன்னோர்கள்.இன்றும் அதைத்தான் செய்கின்றனர்,இதுவல்ல இன்றைய அவசியம்,விவசாயம் சார்ந்த உற்பத்தியினால் நிறைவு அடைந்தனர் நமது முன்னோர்கள்,ஆனால் இன்றைய நிலை பொருள் ஈட்டல் என்பது கிராமம் சார்ந்ததாக இல்லை,இடம்பெயர்ந்த அல்லது கடல் கடந்ததாகவே உள்ளது ஆகவே அதற்க்கு ஏற்றவாறு நமது இளைங்ஞனை தயார்படுத்தவேண்டியது அவசியமாகிறது.

ஒருமைக்கன் நான்னற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து.

வாழ்த்துக்களுடன்,

கண்ணன்.
பஹ்ரைன்.

சனி, செப்டம்பர் 26

ஆம்பலாப்பட்டு கல்வி அறகட்டளை நிதியளிப்பு கூட்டம்.

ஆம்பல் மன்றத்தின் ஆலோசகர் திரு. சக்திவேல் கண்டியர்

C.ராஜா சிதம்பரம். பொருளாளர் ஆம்பல் மன்றம், பஹ்ரைன்

K.S.M. மணிவேல். தலைவர் ஆம்பல் மன்றம், பஹ்ரைன்

வெள்ளி, செப்டம்பர் 25

எனது சிறிய முயற்சிக்கு உதவிய ஆம்பல் மன்றம் பகரின் மற்றும் நண்பர்கள்.



ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காட்டில் அரசின் உதவியோடு நடைபெற்று கொண்டுருக்கும் பள்ளி கட்டிட வேலைபாட்டிற்கு பகரினில் இயங்கிகொண்டுருக்கும் ஆம்பல் கல்வி வளர்ச்சி மன்றம் மூலமாக தினார் 50.000
மற்றும் கீழ்வரும் நபர்களின் மூலம் பெற்ற நிதி பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாக செலவிடப்படும்.
  1. எஸ்.எ.எம்.கண்ணன் ----------------15
  2. சி.ராஜா சிதம்பரம் ------------------- 25
  3. கருணாநிதி ---------------------------20
  4. கரிகாலன் -----------------------------15
  5. அறிவழகன் ---------------------------05
  6. வெற்றிசெல்வன் ---------------------05
  7. சிவகுமார் ------------------------------05
  8. ராமமூர்த்தி ----------------------------05