வெள்ளி, செப்டம்பர் 8

கே ஜீவபாரதி அவர்களின் நேர்காணல் கட்டுரை - தியாக சீலர் தோழர் எஸ்.ஏ.முருகையன்.

தியாக சீலர் ஆம்பலாபட்டு தோழர் எஸ்.ஏ.முருகையன்.


(கே ஜீவபாரதி அவர்களின்  நேர்காணல் கட்டுரை)

ஒட்ட வெட்டிய தலைமுடி... உருவத் தோற்றத்திற்குக் கம்பீரத்தைக் கூட்டும் சிவப்புத் துண்டு... ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியருக்கான தோற்றம்... இதுதான் தோழர் எஸ்.ஏ.முருகையன். எண்பது வயதானவர் என்று எண்ண முடியாத அளவுக்குப் பேச்சும் செயலும். இதோ! ஆம்பலாப்பட்டில் பிறந்த அக்கினிக் குஞ்சுகளில் ஒருவரான தோழர் எஸ்.ஏ. முருகையன் என் வினாக்களை நேர் கொண்டு விடை தருகிறார்.


நீங்கள் பொதுவாழ்க்கைக்கு வந்த பின்னணி பற்றிச் சொல்லுங்கள்...

இந்த ஊரில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்ந்து கொண்டிருந்த மு.அ.குழந் தையன் சேனாதிபதியும், அய்யாவுத் தேவரும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த புண்ணிய கதிரேசன் மாதுராரும் 1937 ஆம் ஆண்டில் இந்த ஆம்பலாப்பட்டுக்கு வந்தனர்.



மு.அ.குழந்தையன் சேனாதிபதியும், அய்யாவுத் தேவரும் சிங்கப்பூரில் வாழ்ந்தபோதே பகுத்தறிவுச் சிந்தனை யாளர்களாகவும், தந்தை பெரியார்மீது பற்றுக் கொண்டவர்களாகவும் இருந் திருக்கின்றனர். அதே பற்றுடன் அவர் கள் இருவரும் ஆம்பலாப்பட்டுக்கு வந்தனர்.

இலங்கையிலிருந்து இந்த ஊருக்கு வந்த புண்ணிய கதிரேசன் மாதுரார் ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை மிக்கவராகவும், அறிவாற்றல் மிக்க வராகவும் திகழ்ந்தார்.

1938  - ல் புண்ணிய கதிரேசன் மாதுரா ருக்கும் தைலம்மைக்கும் பகுத்தறிவு முறைப்படி திருமணம் நடந்தது. தாலி கட்டாமல் மணமக்கள் மாலை மட்டும் மாற்றிக் கொண்டனர். ஆம்பலாப்பட்டு கிராமத்தில் நடந்த முதல் பகுத்தறிவுத் திருமணம் இதுதான். அப்போது எனக்கு வயது 12. இந்தச் சம்பவம் என் சிறு வயதிலேயே ஆழமாகப் பதிந்து விட்டது.

குழந்தையன் சேனாதிபதி, புண்ணிய கதிரேசன் மாதுரார், பூவணம் என்ற கிராமத்தில் பிறந்து ஆம்பலாப்பட்டில் இருந்த தன்னுடைய அக்காள் வீட்டில் தங்கியிருந்த முத்துக்காமாட்சி, அய்யாவுத் தேவர் ஆகியோர் 1939 - ல் ஆம்ப லாப்பட்டில் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினர். அப்போது 16 பேர் காங் கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். அதில் நானும் ஒருவன். இப்படித்தான் என்னு டைய பொதுவாழ்க்கை தொடங்கியது.

பட்டுக்கோட்டை ஜமீன் ஒழிப்பு மாநாடு பற்றி...

1943 - ல் ஒரே சமயத்தில் இந்த ஊரில் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையும், விவ சாய சங்கமும் அமைக்கப்பட்டது. இரண்டிற்கும் புண்ணிய கதிரேசன் மாதுரார் செயலாளராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். செயலாளர் பொறுப்பேற்ற தும் 'புண்ணிய' என்ற அடைமொழியும், 'மாதுரார்' என்ற சாதிப் பெயரும் நீக்கப் பட்டு 'தோழர் சி.கதிரேசன்' என்று அழைக்கப்பட்டார்.


1946 - ல் பட்டுக்கோட்டையில் ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. பாப்பாநாடு ஜமீன் தார், மதுக்கூர் ஜமீன்தார், அத்திவெட்டி ஜமீன்தார், சேத்தன்குடி ஜமீன்தார், பட்டுக்கோட்டை நாடிமுத்துப் பிள்ளை ஆகியோருடன் காங்கிரஸ்காரர்களும், நில உரிமையாளர்களும் இணைந்து பட்டுக்கோட்டை ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாட்டைத் தடுக்கப் பெரும் முயற்சி எடுத்தனர். இதை அறிந்த நாங்கள் ஆம்பலாப்பட்டு மக்களைத் திரட்டிக் கொண்டு, கரம்பயம் மக்களையும் இணைத்துக் கொண்டு மாநாட்டிற்குச் சென்றோம்.

பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்வத் துடன் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பெண்களும் எழுச்சி யுடன் கலந்துகொண்டது எதிரிகளை குலை நடுங்கச் செய்தது. எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து மிகச் சிறப்பாக பட்டுக்கோட்டை ஜமீன் இனாம் ஒழிப்பு மாநாடு நடந்து முடிந் தது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட முதல் தீர்மானம் 'வெள்ளையனே வெளியேறு' என்பதாகும். இந்த மாநாட்டின்போது ஆம்பலாப்பட்டு, கரம்பயம் மக்களால் பட்டுக்கோட்டை நகரம் முழு வதுமாக முற்றுகையிடப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்.



சாதியக் கொடுமைகளை எப்படி எதிர்கொண்டீர்கள்?

சாணிப்பால், சவுக்கடி கொடுமைகள் ஆம்பலாப்பட்டில் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. ஆனால் தீண்டாமை போன்ற இழிநிலைகள் இங்கும் இருந் தன. மணநாளன்று மணமகன் குதிரை யில் வலம் வருவது இந்த ஊர் வழக் கம். இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்த ஊரில் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து நம் கட்சியும், விவசாய சங்க மும் போராடி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மணமகனும் குதிரையில் மண நாளன்று ஊர்வலம் வர அனுமதி வாங்கித்தந்தது.


பட்டுக்கோட்டை தாலுகா தாழ்த்தப்பட்டோர் லீகின் செயலாளராக 1947 ஆம் ஆண்டில் பொறுப்பு வகித்த ஆம்பலாப் பட்டு தோழர் பி. கோவிந்தசாமியைக் கொண்டு, அந்த அமைப்பின் மாநாட்டை ஆம்பலாப்பட்டு குடிக்காட்டில் நடத்த முடிவு செய்தது. இந்த மாநாட்டில் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆறுமுகம், சி.கதிரேசன், ஆகியோருடன் நானும் கலந்துகொண்டேன். இதை விரும்பாதவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியை வெறுப்பவர் களும், சாதிப்பித்துக் கொண்டவர் களும் ஒன்றிணைந்து தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொண்ட எங்களை ஊர்க் கட்டுப்பாடு என்ற போர்வையில் ஒதுக்கி வைக்க முயன் றனர். நம் கட்சிக்கும், விவசாய சங்கத் திற்கும் அன்று இருந்த செல்வாக்கால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.




பொங்கல் பண்டிகையின்போது பிற சாதியினர் வீடுகளில் அடுப்பு தயார் செய்து கொடுத்தல், குப்பை கூளங் களைச் சுத்தம் செய்தல் போன்ற பணி களில் தாழ்த்தப்பட்டவர்கள் ஈடுபடுத் தப்பட்டனர். அத்தகைய பணிகளைச் செய்த அவர்களுக்குச் சோறு மட்டும் தான் கூலியாகக் கொடுக்கப்பட்டது. டீ கடைகளில் தனி டம்ளர் முறை இருந் தது. கோயில்களுக்குள் அரிஜன மக்கள் நுழைவதற்குத் தடையும் இருந் தது. இவை அனைத்தையும் நம் கட்சி யும் விவசாய சங்கமும் எதிர்த்துப் போராடி தலித் மக்களுக்குச் சம உரிமையை வாங்கித் தந்தது.



அடக்குமுறை காலத்தில் நீங்கள் அனுபவித்த கொடுமைகள் பற்றி...

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இந்தி யாவில் தடை செய்யப்பட்டதும், தலை வர்கள் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். ஆம்பலாப்பட்டிற்கு அருகில் இருக்கும் செம்பாளூர்க் காடு களில் கட்சி ஊழியர்களுக்கு அரசியல் வகுப்பும், போராட்டப் பயிற்சியும் தலை வர்களால் கொடுக்கப்பட்டது.


இதை அறிந்த செம்பாளூர் நிலச்சு வான்தாரும், காங்கிரஸ் கட்சிக்காரரு மான சாம்பசிவ ஐயர் கம்யூனிஸ்டு களைக் காட்டிக் கொடுக்க முயன்றார். தோழர்கள் இரணியன், ஆறுமுகம், ரகுநாத வன்னியர் ஆகியோருடன் இணைந்து சாம்பசிவ ஐயரின் முயற் சியை முறியடிக்க நினைத்தோம். இந்தக் காலகட்டத்தில் தோழர்கள் ஏ.கே.கோபாலன், அனந்த நம்பியார், பி.இராமமூர்த்தி, எம்.வி.சுந்தரம், மணலி கந்தசாமி, பி.சீனிவாசராவ், எம்.காத்தமுத்து, எம்.மாசிலாமணி ஏ.வி.ராமசாமி, கே.பி.நடராசன், ஏ.எம்.

கோபு போன்ற மத்திய, மாநில, மாவட்ட கட்சித் தலைவர்கள் எங்களுக்கு வழி காட்டினர்.

போலீசுக்கு கம்யூனிஸ்டுகளைக் காட்டிக் கொடுக்க முயன்ற சாம்பசிவ ஐயரின் வீடு தாக்கப்பட்டது. இதைக் காரணமாகக் கொண்டு தன்னைக் கொலை செய்ய முயன்றதாகவும், வீட்டுப் பொருட்களைக் கொள்ளையடிக்க முயன்றதாகவும், அரசுக்கு எதி ராகச் செயல்படத் திட்டமிடுவதாகவும் ஆம்பலாப்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த 68 பேர்மீது சாம்பசிவ ஐயர் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு அரசு வழக் காக மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர் களைக் கைது செய்வதற்காக சிறப்புக் காவல்படை ஆம்பலாப்பட்டை முற்று கையிட்டது. போலீசார் ஊருக்குள்  புகுந்து மிருகத்தனமாக அடக்குமுறை களைச் செய்தனர்.


தோழர்கள் இரணியன், ஆறுமுகம், வெ.அ.சுப்பையன், டி.காசிநாதன் ஆகியோருடன் நானும் தலைமறைவானேன். இராணியன், ஆறுமுகம், மணலி கந்தசாமி ஆகியோருடன் நானும் ஆம்பலாப்பட்டில்தான் தலை மறைவாக இருப்பதாக நினைத்து எங்களை உயிருடனோ பிணமாகவோ பிடிக்கப் போலீசார் முயன்றனர். இதைச் செய்பவர்களுக்கு ரூபாய் 500 பரிசளிப்பதாகவும் அறிவித்தனர். தோழர்கள் வெ.அ.சுப்பையன் டி. காசி நாதன் ஆகியோர் வீட்டையும், என் வீட்டையும் போலீசார் தாக்கி இடித்துத் தள்ளினர்.


கரம்பயம், கீழக்கோட்டை ஆகிய பகுதி களில் தலைமறைவாக இருந்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் சிங்கார வேலரின் 'மார்க்சிய மெஞ்ஞானம்' என்ற நூலைப் படித்துத் தெளிவு பெற் றேன். தலைமறைவாக இருந்த என்னை என் தந்தை வந்து சந்தித்து என்னை மனமாற்றம் செய்ய முயன் றார். "எனக்குச் சேரவேண்டிய சொத்து களை தங்கைக்குக் கொடுத்து விடுங் கள். நான் உயிரோடு மீண்டு வந்தால் உங்களைச் சந்திக்கிறேன்" என்று சொல்லி என் தந்தையை அனுப்பி வைத்தேன். ஆம்பலாப்பட்டுப் பகுதி


யிலிருந்து தலைமறைவாக சென்னைக்குச் சென்றேன். இங்கு தான் தோழர்கள் வெங்கடேச சோழகர், மதனகோபால், மங்களசாமி பி.சீனி வாசராவ் ஆகியோர் தொடர்பு எனக்கு ஏற்பட்டது.


மூன்றரை ஆண்டு தலைமறைவு வாழ்க்கை முடிந்து 1953 பிப்ரவரி 23 அன்று தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜரா னேன். ஒருவாரம் விசாரணை நடந் தது. நான் ஆளான மூன்றாம் நாள் என் தந்தை இறந்தார். 37 - வது நாள் சென்னை உயர்நீதிமன்றம் எனக்கு ஜாமீன்  வழங்கியது.






குறிப்பு: மேற்கண்ட சில படங்களை தவிர மற்ற செய்திகள் https://kallarkulavaralaru.blogspot.com என்ற வலைதளத்தில் இருந்து எடுக்கபட்டது.

சனி, ஆகஸ்ட் 5

ஆம்பலாபட்டு தோழர் எஸ்.ஏ.எம் அவர்களை பற்றி 'தியாக பூமி' என்ற நூலில் இருந்து.


ஒன்றுபட்ட தஞ்சை மண்ணில், நிலபுரபுத்துவ ஆதிக்க சக்திகளுக்கு எதிராக நிகழ்ந்த போரட்டதில் சொல்லனா துன்பங்களை அனுபவித்து அடிதட்டு மக்களுக்கான சராசரி வாழ்வினை ஆதிக்க சக்திகளிடமிருந்து பெற்று தந்தனர் என்னற்ற தோழர்கள். அவர்களை பற்றிய வரலாற்று பதிவாக தோழர் மு.பாரதிமோகன் அவர்கள் எழுதியுள்ள ‘தியாக பூமி’ என்ற நூலில் இருந்து ஆம்பலாபட்டு தோழர் எஸ்.ஏ.எம் அவர்களை பற்றி..

 

 


 

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டிட, அவர்தம் வாழ்கையில் உயர்நிலை அடைய, சமுதாயத்தில் ஜாதி, மத இன பேதமற்ற சமத்துவ நிலைகொணர தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாடி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்ட்சியில் பதினாறு வயதிலேயே தன்னை இணைத்துக் கொண்டவர் எஸ்.எ.முருகையன்.

 

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தந்நாடு தாலுக்க, ஆம்பலாப்பட்டு கிராமம் இவரது சொந்த ஊர். இவரது தந்தை பெயர் அண்ணாமலை மாதுராயர். தாயார் பெயர் செல்லத்தமாள். முருகையன் 1926 ஆம் ஆண்டு பிறந்தவர். ஐந்தாம்வகுப்பு வரை படித்தவர். இவருடன் மாணிக்கதம்மாள்,மீனாம்பாள், செளபாக்கியம் எனற மூன்று சகோதரிகளும் பிறந்தனர்.

 

ஆம்பலாப்படு கிராமம் மதுக்கூர் ஜமின்தாருக்கு சொந்தமான கிராம்ம. ஜமிந்தாரின் நெருக்கடியால் விவசாயிகளும், தொழிளாலர்களும் சொல்லனா கொடுமைகளுக்கு ஆளாக்கபட்டனர். இதனை பார்த்த முருகையனுக்கு இளமையிலேயே இதனை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் உதயமானது.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்பரையில் விவசாயிகள் சங்கம் தோற்றுவிக்க பட்டு தமிழகம் முழுவதும் அந்த செங்கொடி இயக்கம் பரவ ஆரம்பித்துத. 1943 ஆம் ஆண்டு ஆம்பலாப்பட்டிலும் எஸ்.ஏ.முருகையன், வெ.அ.சுப்பையா, கதிரேச மாதுராயர், வஸ்தாவி வைத்திலிங்கம், ராசு சேனாதிபதி, குழந்தைவேலு சேனாதிபதி, அய்யாவு சேனாதிபதி மற்றும் 15 இளைஞர்கள் கொண்ட முதல் கட்சி கிளை தொடங்கபட்டது. கதிரேசன் செயலாளராக தேர்வு செய்யபட்டார் மேல்கமிட்டி சார்பில் கே.பி. நடராஜன், மறவகாடு கிட்டு இவரும் கலந்து கொண்டனர்.

 

மதுக்கூர் ஜமின்தாரின் வரிவசூல், புறம்போக்கு நிலங்களை விற்பது விவசாயிகளிடம் மிரட்டி குடிவாரம் வசூலிப்பது இவைகளை எதிர்த்து ஆம்பலாப்பட்டு கம்யூனிஸ்ட்கள் போரடியதால் 1947 ல் கிராமத்தில் பெரும்பகுதி இளைஞர்கள் செங்கொடியின் கீழ் அணி திரள ஆரம்பித்தனர்.

 

முருகையன் வெட்டுவார்கோட்டை, ராமசாமி தேவர், மறவக்காடு கிட்டு கேபி,நடராஜன், இரணியன், முத்தையா, வெ.அ. சுப்பையா, மாசிலாமணி இவர்களுடன் இணைந்து செல்லதூர்வெட்டிகாடு, பின்னையூர், வடவாளம்,செங்கம்மேடு, பத்துக்தாக்கு, நெய்வேலி, வெங்கரை, கொல்லைகாடு, திப்பியவிடுதி,பூவாளுர் வரை விவசாய சங்கத்தைய்யும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளையும் ஏற்படுதியவர்களில் முருகையனும் ஒருவர்.

 

ஆம்பலாப்பட்டு பேரவை கூட்டங்களில் மணலி சி.கந்தசாமி, கே.பி, நடராஜன், சிவராமன், இரணியன் மறவக்காடு கிட்டு ஆகிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

முருகையன் குடும்பம் நல்ல வசதிபடைத்த குடும்பம். அண்ணாமலை மாதுராயர் என்றால் ஆமபலாப்பட்டு மக்களே தனிமரியாதை கொடுப்பார்கள். இருபது ஏக்கர் நிலம் பம்பு செட் என வசதி படைத்தவராக வாழ்ந்து வந்தார். முருகையன் மட்டும்தான் ஆண் மகன் எனவே இளமைகாலத்திலேயே செல்வாக்குடன் வளர்ந்து வந்தவர் முருகையன்.

 

1947 ஆம் ஆம்பலாப்பட்டில் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடந்தது. அதில் மணலி சி.கந்தசாமி, கேபி.நடராஜன், மறவக்காடு கிட்டு, இரணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

கம்யூனிஸ்ட் கட்சி மீது தடை விதிக்க பட்டது. ஆம்பலாப்பட்டு கிராமமே போலீஸ் தாக்குதளுக்கு உள்ளான கிராமம். 1949 ஆம் ஆண்டில் போலீசாரிடம் அடி வாங்கதா ஆண்களே இல்லை என்று கூட சொல்லாலாம். அந்ததளவுக்கு போலீசரால் கொடுமைபடுத்தபட்ட கிராமம். காரணம் மணலி கந்தசாமி, இரணியன், சிவராமன் தலைமறைவு வாழ்க்கை நடத்திய பகுதி எனபதனால் பெரிதும் சோதனைக்கு ஆள்பட்ட கிராமம் ஆம்பலாப்பட்டு.

செம்பாளூர் அய்யர் உணவு கொடுத்த கோனாரை போலீசிடம் காட்டி கொடுத்து விட்டு கம்யூனிஸ்ட்களை பிடித்து கொடுக்க முயற்சி செய்ததால்  அய்யர் வீடு தாக்கபட்டது. அதுவே செம்பாளூர் கலவரம் அதில் முருகையன் பங்கு பெற்று வழக்கிலும் சேர்க்கபட்டார்.

 

முருகையன் வீடு இடித்து தரைமட்டமாக்கபட்டது. ஆடு மாடுகளை எல்லாம் போலீசார் ஏலம் போட்டு எடுத்து சென்றனர். ஆவணி மாதம் வெயில் தாங்க முடியவில்லை காட்டுமிராண்டி போலீசார் முருகையனின் தாயாரையும் சகோதரிகளையும் சுடும்மணலில் நிற்க வைத்து அடித்து முருகையன் எங்கே சொல், சொல் என அடித்து கொடுமைபடுத்தினார்கள். மணல் கொதித்து கால் அடிபாகம் கொப்பளித்து போய்விட்டது. ஆனாலும் பரவாயில்லை தெரியாது? தெரியாது? என சொனார்களே தவிர வேறு எதையும் சொல்லவில்லை.

 

ஆம்பலாப்பட்டு குடிக்காட்டில் ஊர் மக்களை ஒரே இடத்தில் கட்டி வைத்து முட்டி போட வைத்து அடித்து கொன்டே இருக்கின்றனர். முருகையன் சகோதரியின் மகள் மூன்று வயது பெண் குழந்தை வயலில் பண்னை ஆட்கள் போர் செட்டில் உழுது கொண்டு நிற்கின்ற அவர்களை பார்த்து போய் கொண்டு இருந்த சிறுமி வயலில் கோடை காலத்தில் வெட்டபட்ட கிணற்றில் விழுந்து இறந்து பிணமாக மிதக்கின்றாள்.

 

சிறுமி கிணற்றில் மிதப்பதை பார்த்த பண்னையாட்கள் குழந்தையை தூக்கி கொண்டு சென்ற துயரகாட்சியை பார்த போலீசார் முருகையன் தாயையும் சகோதரிகளையும் அடிப்பதை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். காங்கிரஸ் ஆட்சியின் போலீசார் அடக்குமுறைக்கு ஆறுமுகத்துக்கு முன்பே முருகையன் சகோதரி மகள் உயிர்தியாகம் செய்து ஆம்பலாப்பட்டு கிராமம் செங்கொடுயின் பிறபிடமாக மாற்றியது. அந்த சிறுமியின் உயிர் தியாகம்.

 

வீடு இடிந்து தரை மட்டமானது.குடியிருக்க இடம் இல்லை. சகோதரியின் மகள் கிணற்றில் விழுந்து  3 வயது சிறுமி மரணம். தாய் தந்தையை கட்டி வைத்து அடிகிக்கிறது போலீஸ் பட்டாளம். இப்படி கஷ்டமான நிலையிலும் முருகையன் தந்தை அண்ணாமலை மாதுராயர் மகனை பார்த்து உனக்குதானே இவ்வளவு சொத்தும் சேர்த்து வைத்துள்ளேன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை உன்னை பெரிய வக்கீலைபிடித்து கோர்ட்டில் ஆஜர்ராக்குகிறேன் என சொன்னார். தந்தை சொல்வதை அமைதியுடன் கேட்ட முருகையன் அப்பா நீங்கள் சொல்வதிலும் ஒரு வகையில் நியாயம் இருக்கிறது இருந்தாலும் என்னை கண்டுபிடிக்கும்படி அரசாங்கம் போலீசை அனுப்பியுள்ளது.என்னை கட்சி ஆஜராக சொல்லவில்லை.தலைமறைவாக இருந்து கட்சி வேலை செய்ய வேண்டும் என்றுதான் முடிவு செய்துள்ளனர். ஆகையால் என்னால் கட்சி முடிவை மீற முடியாது எது நடந்தாலும் நடக்கட்டும் கவலைபடாதீர்கள் எனக் கூறினார்.

 

எனது சகோதரிகளை நல்ல மாப்பிள்ளைகளைபார்த்து அவர்களின் திருமணங்களை நல்லபடியாக செய்யுங்கள்.அதுவே எனக்கு நீங்கள் செய்யும் நல்ல காரியம். ஒன்றும் கவலைபட்டாதீர்கள் என முருகையன் சொன்னதைகேட்ட அண்ணாமலை மாதுராயர் கண்ணீர் சிந்தியபடி சென்றார்.

 

கட்சிதான் தனது உயிர் மூச்சு எனக் கட்டுபாட்டுடனும், நிதானமாகவும்,சாதுரியமாகவும் தலைமறைவுகாலத்தில் போலீசிடம் பிடிபடாமல் கட்டிபணி செய்தவர் முருகையன்.

 

முருகையனை காட்டி கொடுப்பவரக்ளுக்கு தக்க சன்மானம் வழங்கபடும் என போலீசார் அறிவித்தும் யாரும் காட்டிகொடுக்கவில்லை. ஜந்தாண்டு காலம் தலைமறைவு வாழ்கை நடத்திய முருகையன் 1953 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23ந் தேதி சென்னை உயர்நீமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.

 

முருகையன் சென்னை மத்திய சிறையில் 1 ½ ஆண்டுகள் அடைக்கபட்ட பிறகு சென்னை உயர்நீமன்றத்தால் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கபட்டது. சென்னையிலிருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார் முருகையன்.

 

மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்ட இருந்த தோழர்கள் ஆர்.நல்லகண்ணு,வ.மீனாட்சிநாதன், கே.பி.எஸ்.மணி, அழகமுத்து (நெல்லை) கிரிஷ்கோனார்(தூத்துக்குடி) பயிவான் அருணாசலம் (தூத்துக்குடி) டேவிட்.ராஜாமணி, கருப்பையா,மருதையன்(மதுரை)மொட்டையன் உட்பட 22 பேருடன் மதுரை சிறையில் வாழ்ந்தவர் முருகையன்.

 

மதுரை சிறையில் நடக்கும் கொடுமைகளைக் கண்டித்து கம்யூனிஸ்ட்கள் பத்து நாள் தொடர்ந்து நடந்த உண்ணாவிரத்திலும் கலந்து கொண்டவர் முருகையன். மதுரை மத்திய சிறையிலேயே படித்து எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதி தேர்வு பெற்றவர் முருகையன். 1957 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி மதுரை சிறையிலிருந்து விடுதலை அடைதார்.

 

ஒன்றுபட்ட பட்டுகோட்டை தாலுக்காவிலிருந்து 1958 ஆம் ஆண்டு ஒரத்தநாடு தாலுக்கா பிரிந்து முதல் மாநாடு ஊரணிபுரத்தில் வெட்டுவார் கோட்டை ராமசாமி தேவர் தலைமையில் நடந்துது.  மாவட்ட செயலாளர் எ.வி. ராமசாமி கலந்து கொண்டார். முதல் செயலாளராக எஸ்.எ.முருகையன் தேர்வு செய்யபட்டார்.

 

எஸ்.எ.முருகையன் (செயலாளர்) வெட்டுவார்கோட்டை ராமசாமி தேவர்,வெ.அ.சுப்பையா,தி.காசிநாதன், யூ.கோவிந்தசாமி பின்னையர், சேதுராஜன் பிள்ளை புதுவிடுதி, பா.கோவிந்தசாமி ஆகிறோர் ஒரத்தநாடு தாலுக்கா கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யபட்டனர்.

 

1960 ஆம் ஆண்டு முருகையன் திருமணம் நடந்தது. பிச்சையமாள் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். முருகையன் திருமணம் மணலி சி.கந்தசாமி தலைமையில் நடந்தது. மணமக்களை வாழ்த்தி எம்.காத்தமுத்து பேசினார். பிச்சையமாளின் தந்தை முருகையனை தலைமறைவு காலத்தில் பாதுகாத்தவர். செய்த உதவிக்கு நன்றி கடனாக பிச்சையம்மாளை தனது வாழ்கை துணைவியாக ஏற்று கொண்டார். இவர்களுக்கு அசோகன்,மகேந்திரன்,சாமிநாதன். ஹோசிமின் எனற அண்ணாமலை மற்றும் கண்ணன் என ஜந்து ஆண்களும் செல்லாநாயகி என்ற ஒரு பெண்ணும் உண்டு. ஜந்து புதல்வர்களும் கம்யூனிஸ்ட் கட்சி உருப்பிணர்களாகவே செயல்பட்டு வருவது பாரட்டுக்குரியது.

 

ஆம்பலாப்பட்டு கிராமத்தில் வாழ்கின்ற ஆதிதிராவிடர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்க்கும் சமுதாய அடக்குமுறைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் முன்நின்றவர் முருகையன்.

 

ஜமின்தார் வீட்டிற்க்கு பொங்கல் தினத்தில் பழம் அரசி தேங்காய்,காய்கரி,வாழை இலை இவைகளை கொண்டு சென்று கொடுத்துவிட்டு வணங்கி வருவது வழகம்.இதனை உலுப்பை கொடுப்பது என்று சொல்லவது வழக்கம். 

 

ஜமீன்தாருக்கு உலுப்பை கொடுப்பது இல்லை என்று  மாற்றிய பெருமை ஆம்பலாப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன்முன்னின்று போரடிய முருகையன், சுப்பையா, ஆறுமுக, காசிநாதன், கதிரேசன் போன்ற தோழர்களுக்கும் உண்டு.

 

முருகையன் பட்டுகோட்டை தாலுக்கா கமிட்டி உருப்பினராக, ஒரத்தநாடு வட்டார செயலாளராக, மாவட்ட விவசாய சங்க பொதுகுழு உருப்பிணராக, ஆமபலாப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராகவும் செயல்பட்டவர்.

 

கட்சி மாவட்ட மாநாடு,மாநில மாநாடுகள் பலவற்றில் பங்கு கொண்டவர்.விவசாய சங்க மாவட்ட மாநாடு,மாநில மாநாடுகளில் பிரதிந்தியாக கலந்து கொண்டவர் முருகையன்.

 

கட்சி அடக்குமுறை காலத்தில் 3 ½ வருடம் தலைமுறை வாழ்கையும் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தண்டிக்கபட்டு சென்னை, மதுரை சிறைகளில் 4 ½ வருடம் தண்டனையும் அனுபவித்தவர் முருகையன்.

 

எஸ்.எ.எம் எனத் தோழர்களால் அன்போடு அழைக்கபட்ட முருகையன் எப்போழுதும் அமைதியாகவும் நிதானத்துடனும் கொள்கைபிடிப்புடனும் செயல்படகூடியவர். அடக்குமுறைகாலத்தில் கடுமையான நெருக்கடியில் தனது குடும்பமே பாதிக்கபட்ட பொழுது மனம் தளராது, கொண்ட கொளகைக்காக உழைக்கும் மக்களை பாதுகாத்திடும் உன்னத லட்சியமான மார்க்சிய லெனினிய சித்தாந்தபாதையில் வெற்றிநடை போட்டு நடந்து வந்து இன்றும் லட்சிய வீரனாக நம்மிடையே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றவர் முருகையன். முருகையனைப் போன்ற தோழர்கள் காட்டிய பாதையில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கின்றது.அந்த லட்சியபாதையில் நாம் முன்னோக்கி செல்வோமாக!