சனி, செப்டம்பர் 26

19.09.2009 தினமணி நாளிதழில் வெளிவந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு.

அகதிகளாக வாழும் தமிழர்கள்?

சா. ஷேக் அப்துல்காதர்

First Published : 19 Sep 2009 11:56:00 PM IST

Last Updated :


வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்ற தமிழர்கள் பல்வேறு காரணங்களால் தங்கள் பாஸ்போர்ட்டை இழந்து, சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக துபை, அபுதாபி, சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
வளைகுடா நாடுகளுக்குப் பணிக்குச் செல்லும் பட்டதாரிகள், தொழிற்கல்வி பயின்றவர்கள் ஓரளவு நியாயமான ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், உதவியாளர், தொழிலாளர், அலுவலக உதவியாளர் என பணிபுரியும் விசாவில் சென்ற அனைவரும் அங்கு பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்றால் கை நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்ற கனவுகளோடு பல லட்சம் செலவு செய்து செல்கின்றனர். அங்கு சென்ற பிறகு அனுபவிக்கும் இன்னல்களால் வேறுவழியின்றித் தவிக்கின்றனர் என்பதுதான் உண்மை.
வளைகுடா நாடுகளில் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தநிலை இப்போது இல்லை. அங்கு பெருமளவில் கட்டுமானப் பணிகளில் இந்தியர்களை ஈடுபடுத்தினர். அங்குள்ள கடுமையான வெயிலில் கட்டுமானப் பணி செய்கின்றனர்.
வட்டிக்கோ, நகைகளை விற்றோ பணம் பெற்று அதன் மூலம் வேலைக்குச் செல்வோர் விசாவுக்காகச் செலவு செய்த தொகை கிடைக்கும் வரை வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோர், அந்நாட்டில் பணி செய்ய விசா வழங்கியவரிடமோ அல்லது அந்நாட்டு அரசிடமோ பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும்.
அதன் பின்னர்தான் அந்நாட்டில் பணி செய்ய அடையாள அட்டை வழங்கப்படும்.
பணிக்கான ஒப்பந்த காலம் முடிந்து சொந்த ஊருக்கு விடுமுறையில் திரும்பும்போது, பாஸ்போர்ட் திருப்பி வழங்கப்படும். தமிழகத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் முதலில் மொழி பிரச்னையில் சிக்கித் தவிக்கின்றனர்.
ஆங்கிலம், இந்தி பேசத் தெரிந்திருந்தால் மட்டுமே வளைகுடா நாடுகளில் சாதாரணமாக வாழ முடியும். இல்லையெனில், மொழியைக் கற்கும் வரை சிரமம்தான். இருப்பினும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செல்லும் தமிழர்கள் வேறு வழியின்றிப் பணிபுரிகின்றனர்.
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்வோரில் பலர் தங்கள் பாஸ்போர்ட்டை தொலைத்து விடுகின்றனர். பலர் பணியில் சேர்ந்த நிறுவனம் பிடிக்காமல் வேறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்கின்றனர்.
அவ்வாறு பணி செய்பவர்களுக்கு மன்னிப்பு அளித்து அந்நாட்டு அரசாங்கம் அவர்களை சொந்த நாட்டுக்கு, அந்த நாட்டுச் செலவில் அனுப்பி வைக்கும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.
தற்போது, வளைகுடா நாடுகளில் பாஸ்போர்ட் இன்றி தலைமறைவு வாழ்க்கை வாழும் இந்தியர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதில்லை என்று கூறப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியால், அங்கு தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலையில் கிடைத்த வருமானத்தில், தங்குவதற்கு இடம் இல்லாமல் அகதிகளாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற பிரச்னையில் உள்ளவர்கள் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டாலும், தேவையான உதவி கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, வளைகுடா நாடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அகதிகளாக வாழும் தமிழர்களைக் காப்பாற்றவும், அவர்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி. தினமணி

0 comments:

கருத்துரையிடுக