செவ்வாய், டிசம்பர் 21

மக்களாட்சி=காங்கிரஸ்+தி.மு.க+நீரா ராடியா.



கடந்த சில மாதங்களாக பரபரப்பாக செய்திதாள்களில் இடம் பிடித்து இன்று உச்சகட்டத்தை அடைந்திருக்கும் ஸ்பெக்ட்ரெம் ஊழல் அதை தொடர்ந்து பாரளுமன்ற கூட்டதொடர் முடக்கபட்டது இவையாவும் ஜனநாயகம் என்பது சிலரின் விருப்ப,வெறுப்புக்களுக்கு உட்பட்டது என்பதனை நிருபித்துவிடது இந்திய போலி ஜனநாயகம்.வழக்கம் போல் எதிர்கட்சி ஆளும் கட்சியாகட்டும்,ஆளும் கட்சி எதிர் கட்சியாகட்டும் ஒருவருக்கொருவர் நியாப்படுத்திகொள்ள வசதியாக இந்திய பாமரனின் சகிப்புதன்மை அமைந்து விட்டது.

பாமர தொண்டன் அறியாமையால் தலைமை செய்யும் அனைத்தும் சரியானெதென்றும்,அவர்கள் செய்யும் ஊழல்களையும்,தவறுகளையும் நியாயபடுத்தி
பேசுவது வழக்கமாக்கிகொண்டதினால்,கோடிகளில் புரளும் பதவிகளாகி போனது மக்கள் பிரதினுத்துவம் மற்றும் வாரிசுகளுக்கு அப்பாற்பட்டது அல்ல அரசியல் என்பது நியாயபடுத்தப்பட்டுவிடது.

உலகம் போற்றும் ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சி..ஸ்பெக்ட்ரெம்...காமென்வெல்த்...ஆதர்ஷ் குடியிருப்பு...மற்றும் நீரா ராடியா...டாடா...அம்பானி..இதுவாகதான் இருக்குமோ? வாழ்க ஜனநாயகம்...

வியாழன், ஜூலை 1

வாட்டாக்குடி இரணியனை பற்றிய ஒரு சிறு தொகுப்பு; ஜெயா தொலைகாட்சியின் 'கிரைம் டைரி'

அன்றைய பிரிக்கபடாத மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுகோட்டைக்கு அருகில் வடசேரி என்ற இடத்தில் காரல் மார்க்ஸின் பிறந்த தினமான மே 5தேதியில் சுட்டு கொல்லப்பட்ட வாட்டாக்குடி இரணியன்,ஆம்பலாபட்டு ஆறுமுகம் இவர்களை பற்றிய ஒரு சிறு தகவலாக ஜெயா தொலைகாட்சில் 'கிரைம் டைரி' என்ற நிகழ்ச்சியில் தொகுத்திருந்தனர்.இந்த பகுதியில் விவசாய தொழில் சார்ந்த மக்களை வாழையடி வாழையாக அடக்கி ஒடுக்கி அவர்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்துக்கொண்டிருந்த பண்னையார்களுக்கு எதிராக கொதித்தெழுந்து ஒத்த கருத்துடைய இளைஞர்களை பொதுவுடைமை என்ற உயர்ந்த தத்துவத்தின் கீழ் ஒருமுகபடுத்தி, போரடிய வாட்டாக்குடி இரணியன் என்ற மாவீரனை அதிகார மையம் வஞ்சகமாக 1950 மே 5 ல் சுட்டுக்கொன்றனர். வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாபட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பவான் ஓடை சிவராமன், இவர்களோடு இணைந்து போரடிய மற்ற தோழர்கள் பொதுவுடைமை இயக்க உயர்மட்ட குழு எடுத்த முடிவான மக்களாட்சி தத்துவத்தோடு இணைந்து போரடி ஒடுக்கபட்ட மக்களுக்கு சுயமரியாதை வாழ்வை பெற்று தருவதென என்று எடுத்த முடிவால், அதிகார மையத்திடம் சரணடைந்த இளைஞர்கள் கடுமையான சிறைதண்டனைக்கு பிறகு வெளிவந்து தாங்கள் கொண்ட கொள்கையின் பிடிப்பால் மக்களாட்சி தத்துவத்தோடு இணைந்து கிராமங்களில் தீண்டாமை ஒழிப்பு,நில சீர்திருத்த முறை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போரடி மாற்றத்தினை கண்டு இன்று வாழ்கையின் கடைசி கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சிலரின் அனுபவத்தோடு ஜெயா தொலைகாட்சியில் அவ்வை மீடியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தனர்.இது போல் நிகழ்சிகளுக்கு நேரம் வழங்கிய ஜெயா தொலைகாட்சிக்கு எனது வாழ்த்துகள்.

ஒளி காட்சியை காண இங்கே சொடுக்கவும்.

சுதந்திர இந்தியாவில் தாங்கள் அடிமைகளாக வாழ்கிறோம் என்ற உணர்வினை உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தி, அவர்களுக்கு சுயமரியாதை வாழ்வினை பெற்று தருவதற்காக போரடி இறந்த இவர்கள் ஏற்படுத்திய மாற்றம்,இப்பகுதியின் இன்றைய மக்களின் சுயமரியாதை வாழ்க்கையின் அடிநாதம் என்றே குறிப்பிடலாம்.வாட்டாக்குடி இரணியனின் நெருங்கிய சகாக்களில் எனது தந்தையும் ஒருவர் என்று கூறிகொள்வதில் பெருமையடைகிறேன்.(நிகழ்சியின் க‌டைசியில் அனுபவத்தை பகிர்ந்துகொண்ட எஸ்.ஏ.முருகையன்)

ஞாயிறு, ஜூன் 13

தலைமுறை கடந்த ஆம்பலாபட்டு சின்னங்கள்.

ஒவ்வொரு கிராமங்களும் தங்களுக்கென தனிதன்மையான கலாச்சாரம்,காலம் கடந்து நிற்கும் வழிபாட்டு தலங்கள் மற்றும் நினைவு சின்னங்கள் என பல சிறப்புகளை கொண்டுள்ளன.மண்வாசனை மாறாத என் கிராமத்து சில சிறப்புகளை இணையத்தில் இணைத்திட ஒரு வாய்பாக கருதி இதை பதித்துள்ளேன்.




தியாகி ஆம்ப‌ல் ஆறுமுக‌ம் நினைவு தூண் (குடிக்காடு)


அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)


அய்ய‌னார் கோயில் (ஆம்ப‌ல் தெற்கு)


வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)


வீர‌னார் கோயில் (தெற்கு தெரு)


முத்துமாரிய‌ம்ம‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


க‌ங்க‌ளார் கோயில் (க‌ண்டிய‌ர் தெரு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


சிவ‌ன் கோயில் (ஆம்ப‌ல் வ‌ட‌க்கு)


முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)

முருக‌ன் கோயில் (கீழ‌கோட்டை)

சனி, ஜூன் 5

கனவுகளின் தொழிற்கூடம்...

வெளிநாட்டு வேலை என்பது ஒவ்வொறு நடுதர இந்திய இளைஞர்களின் கனவு.இந்த கனவுகள் வெவ்வேறு வடிவங்களில் நிறவேற்றிகொள்ளபடுகிறது.படித்த இளைஞர்கள் தங்களின் தகுதியின் அடிப்படையில் அவர்களாகவே வேலை தேடிகொள்வதும்,சிலர் தங்களின் உறவுகள்,நண்பர்கள் மூலம் நிறவேற்றிகொள்வதும்,மற்றும் பலர் சென்னை போன்ற பெரும்நகரங்களில் இயங்குகின்ற வெளிநாட்டு வேலைக்கு திறமையான தொழில் சார்ந்த
இளைஞர்களை உருவாக்கி அனுப்பும் நிருவனங்களில் கனிசமான தொகை கட்டி அவர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுகொண்டும் உள்ளனர்.



சமீபத்தில் நான் சென்னையில் தங்கியிருந்த போது வெளிநாட்டு வேலைக்கு திறமையான தொழில் சார்ந்த இளைஞர்களை உருவாக்கி அனுப்பும் நிருவனத்தில் கன்சல்டண்டாக பணிபுரியும் எனது நண்பர் மூலம் இங்கு என்ன மாதிரியான பணிகளுக்கு இளைஞர்களை உருவாக்கி அனுப்புகின்றனர் என்று
நேரடியாக காண முடிந்தது.



அனேகமாக இந்த மாதிரியான நிருவங்களில் வெளிநாடுகளில் பயன்படுத்த கூடிய தொழில் நுட்பம்,கருவிகள் மூலம் பயிற்றுவிக்கபடுகின்றனர்.தேர்ந்ததெடுக்கபடுகின்ற இளைஞர்களும் தொழில் கல்வி படித்தவர்களாகவே இருக்கின்றனர்.இந்த இளைஞர்களை நிருவனத்தின் மூலம் நியமிக்கபடுகின்ற ஏஜென்டுகள் இளைஞர்களையும் அவர்களின் குடும்பத்தாரையும் அனுகி நம்பிக்கையை ஏற்படுத்தி ஆட்கள் சேர்கின்றனர்.ஏஜென்டுகளுக்கும் கனிசமான தொகை கமிசனாகவும் கொடுக்கபடுகிறது.



குறிப்பாக தஞ்சை,புதுகோட்டை,அறியலூர்,பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் இளைஞர்கள் சேருவதாக நண்பர் குறிப்பிடுகிறார்.இதுபோன்ற நிருவனங்கள் சென்னையில் அதிக அளவில் இருப்பதாகவும் ஆனால் வெளிநாடுகளில் அங்கிகாரம் பெற்ற நிறுவனங்கள் மிக குறைவு எனவும் குறிப்பிடுகிறார்.



இங்கு அதிக அளவில் கட்டுமான தொழில் சார்ந்த செய்முறை விளக்கங்களும்,உயர் கல்வி படித்தவர்களை கொண்டு கட்டிட வேலைகள் குறித்த விதிகளையும்,அதில் எவ்வாறு தேர்ச்சியுடன் செய்வது மற்றும் பாதுகாப்பு விதிகளை எளிய முறையில் விளக்கி பயிற்றுவிக்கின்றனர்.



ஒவ்வொறு இளைஞனின் கண்களிலும் கற்றுகொள்ள துடிக்கின்ற ஆர்வம், வாழ்கையில் முன்னேற காட்டுகின்ற வேகம் இவையாவும் எனக்கு புதிய உற்சாகத்தை அள்ளி தந்த அனுபவமாய் எனது பயணம்.

வியாழன், மே 13

'களவாணி' திரைபட முன்னோட்ட காட்சிகள்.


படத்தினை க்ளிக் செய்து 'களவாணி' திரைபட முன்னோட்ட காட்சியை காணலாம்.

புதன், மே 12

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் III

அருள்வாக்கு,ஆசி வழங்குவது என்பன மட்டுமென்றி இதுபோல் பல பகுத்தறிவுக்கு எட்டாத சடங்குகள் மக்களின் வாழ்கைமுறையோடு ஒட்டி தவிர்க்க முடியாத சடங்குகளாக மாறிவிட்டன. பல வேத நூல்களை படித்து அதை முழுமையாக கிரகித்துகொண்டு மக்களின் வாழ்கை முறைக்கு தேவையான கருத்துகளை மட்டும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்துகின்ற பெரியோர்களை நமது முன்னோர்கள் மதித்து,போற்றினர். ஆனால் இன்றைய நிலை என்பது வேறு, ஆன்மிக சொற்பொழிவு செய்கிறவர்களையே நாம் கடவுளுக்கு இணையான நிலையினை கொடுக்க முயற்சிக்கிறோம்.அதன் பலன் நாம் தினந்தோறும் செய்திதாள்களிலும்,தொலைகாட்சிகளிலும் காண்கின்றோம்.இன்றைய நிலையில் ஒவ்வொரு இந்து மத ஆன்மீகவாதிகளும் ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு சமம் ஏனெனில் பொருளாதரதிலும் ஆகட்டும்,புகழில் ஆகட்டும் இவர்களே முன்னனி.


எனக்கு தெரிந்தவரை சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் வேத நூல்களை படித்து தெரிவாகி அதில் மக்களுக்கு தேவையான கருத்துகளையோ,ஆன்மிக சொற்பழிவோ,திறமையான மேஜிக்கோ செய்வதாக தெரியவில்லை.சராசரி நடுதர மக்களின் தேவையான கடவுள் பெயர் சார்ந்த ஆறுதல் இவைகளை ஏதோ ஒரு வடிவில் அவர்களின் தேவைகளை அறிந்து வெளிபடுத்துவதினாலும் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் போன்றோரின் வளர்ச்சி அதீதமாகபடுகின்றது.






ஆம்பலாபட்டு கிராம அரசியல் என்பது 1996-க்கு முற்பகுதிவரை முழுமையாக கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்கள் மட்டும் கோழோச்சி கொண்டிருந்தனர்.பிறகு ஏற்பட்டு சில மாறுதல்கள் கம்யூனிஸ்ட் இயக்கதவர்களை ஆம்பலாபட்டு வடக்கில் ஏற்படுகின்ற மாறுதல்களை வேடிக்கை பார்கிறவர்களாக மட்டுமே ஏற்படுத்திவிட்டது.இதனால் சில விமரிசனதிர்க்கு உட்பட்ட மாறுதல்கள் ஏற்பட்டன.இதில் அதீதமாக ஆன்மீகம் சார்ந்த மாறுதல் ஆகும்.ஆம்பலாபட்டு கிராமவாசிகள் சிரியவர் முதல் பெரியோர்வரை எல்லா விசயங்களையும் விமர்சிக்ககூடிய ஆற்றயுடையவர்,இந்த ஆற்றலை ஏற்படுத்திய பெறுமை பொதுவுடமை இயக்கத்தவர்களை சாரும்.


சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்ற தனிபட்ட மனிதரின் வாழ்கையில் ஏற்பட்ட மாறுதல் வேண்டுமெனில் அவரை மிக சிறந்த மனிதனாக மாற்றி இருக்கலாம்.அதன் பலன் பாழடைந்த சிவன் கோயில் ஒரு சில நூற்றாண்டுகளுக்கு பிறகு புதிப்பிக்கபடுகிறது,சில இளைஞர்கள் நல்லதொரு வழிகாட்டளுடன் ஆன்மிக பணி என்றொரு நிலை ஏற்படுகின்றது. இந்த நிலையை விமரிசனம் செய்வது என் நோகம் அல்ல இருப்பினும் இதுபோல் தன் பரிவாரங்களுடன்
செயல்பட ஆரம்பித்த ஆன்மீகசெயல்கள் தான் இன்று மடாலயங்கள்,ஆதினங்கள் என்று கூறிகொண்டு மூடபலக்கவழக்கங்களையும்,சாதிய கொடுமைகளையும் தாங்கிகொண்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்கின்றன, மக்கள் தன்நம்பிக்கையை விட கடவுள் நம்பிக்கையையும் அதன் மூலம் வருகின்ற செயல்களை தன் வாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற பெறும்மாற்றமாக கருதி வாழ்கின்றனர்.ஆகவே அவர்கள் அந்த நம்பிக்கைய கொண்டு சிறப்பான வாழ்க்கை வாழ சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்கின்ற மகேந்திரனின் செயல் ஊக்கமாக இருக்குமாயின் அதுவே அவரின் சிறப்பான ஆன்மீக பணியாக காலம் அவரை வாழ்த்தும், இவை தவிர்த்து உரையாடலிலும்,உருவத்திலும் தன்னை மாற்றிகொள்வதன் மூலம் ஆதின முறைக்கு மாறுகின்ற ஒரு வழியாக
கருத வேண்டியதில்லை.
 
 

முற்றும்.
-------------------------------------

வெள்ளி, ஏப்ரல் 23

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் II

இனக்கமான அரசியல் சூழ்நிலை,எல்லோரிடமும் காணபட்ட சகோதர உணர்வு இவைகளின் மூலம் தமிழீழ விடுதலை புலிகள் இரண்டுர கலந்திருந்த காலம் அது. கடற்கரை மைதானதில் மாலை நேரங்களில் எங்களுக்கு கால்பந்தாட்டம் கற்றுகொடுப்பது,அதற்கு பிரதிபலனாக அவர்கள் உருவாக்கிகொண்டிருந்த சிரிய ரக படகுகளுக்கு விடுமுறை நாட்களில் பலகை எடுத்து கொடுப்பது போன்ற சிறிய உதவிகளை செய்வது எங்களுடைய வழக்கம். அந்த சமயங்களில் அவர்களுக்கு தேவையான காய்கறி,பழம் மற்றும் இறைச்சி போன்றவறை வாங்குவதற்கு நண்பர் மகேந்திரன் தான் செல்வார். நியாயமாக நடப்பதினால் அவருக்கு நல்ல பெயர். ஒருமுறை நாங்கள் எப்போதும் போல் மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தோம்,சிறிது நேரம் கழித்து மைதானமே பரபரப்பானது, ஏனெனில் மைதானத்தை நோக்கி ஒரு உருவம் வந்துகொண்டுருந்தது. தோள்களில் சிறிய வடிவிலான நீருக்கு அடியில் சுவாசிக்க கூடிய இரண்டு உருளைகளை சுமந்துகொண்டும்,கருத்த நிறமுடைய நீச்சல் உடையையும் அணிந்துகொண்டு அந்த உருவம் வந்துகொண்டிருந்தது. மைதானத்தை தாண்டியே அந்த உருவம் தென்னை தோப்புக்கு செல்ல முடியும். நாங்கள் விளையாடிகொண்டிருந்த பந்து அந்த உருவத்தின் பக்கமே இருந்தது அப்போது யாரும் எதிர்பார்கவில்லை அது நடக்கும்மென்று..வந்த உருவம் வேகமாக பந்தை உதைக்க அது நேராக எங்களோடு நின்றுகொண்டுடிருந்த ஒருவன் மேல் பட்டு அவன் நிலைகுழைந்து கீழே சாய்ந்துவிட்டான், இதை கவனித்த மகேந்திரன் நேராக அந்த உருவத்திடம் சென்று 'யோய் அறிவு இருக்காயா இப்படியா செய்வ?' என்றவாறே சண்டைக்கு நின்று விட்டார்.எங்களை போல் இன்னும் ஏராளம் இருந்தும் தைரியமாக அந்த உருவத்திடமும் மற்றவர்களிடமும் நடப்பது மகேந்திரன் மட்டுமே. இதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் தன்னிடமிருந்து வெளிவருகின்ற சொல் அல்லது செயல் தன்னை மிக பெரிய அளவில் பாதிக்கும் என்று தெரிந்தும் கூட தன்னை சார்ந்தவர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை கொண்டு அதை எதிர்த்து போராடும் குணம் அன்று மகேந்திரனிடம் நான் கண்டேன்.


வருடங்கள் கழிந்தன,சில நண்பர்களிடம் விசாரிக்கும் போது அவர்கள் 'இப்போதெல்லாம் மகேந்திரன் சிவன் கோயிலில் தான் இருப்பது,அதுமட்டுமல்ல அருள்வாக்கு சொல்வதாகவும் அது கேட்டு வருகிறவர்களிடம் தனகென்று ஏதும் வாங்காது கோயில் வேலை நடைபெருகிறது ஆகவே அதற்கு தாங்களால் ஆன உதவிகளை செய்துவிட்டு செல்லுங்கள்' என்று கூறுவதாகவும் கேட்டதுண்டு. இந்த அருள்வாக்கு சொல்லும் பக்குவமும் அதை கேட்பவர்கள் நம்பிக்கையோடு ஏற்ககூடிய மனோநிலையும் ஏற்படுத்தகூடிய திறமை எங்கிருந்து வந்தது? வெவ்வேறான பகுத்தறிவுக்கு எட்டாத பதில்களே வருகின்றன. நகர்புறங்களில் நாம் பார்பதும்,கேட்பதும் உண்டு,திடிரென்று ஏதோ ஒரு இடத்தில் காவிவேட்டி கட்டிய சாமி அருள்வாக்கு சொல்வதாகவும் கூட்டம் அலைமோதுகிறது என்றும் பின்பு சில நாட்கள் கழித்து அது சாமி அல்ல ஆசாமி என்று தெரியவரும். ஆனால் கிராமபுறங்களில் இவ்வாறன நிகழ்வு நடைபெருவது சாத்தியமற்றது என்றே கருதுகிறேன், ஏனெனில் கிராமங்களில் பொதுவாக ஒருவரை பற்றி அறிமுகம் மற்றொருவருக்கு தேவையற்றது, ஒவ்வொருவருடைய அசைவுகளும் மற்றவர்களால் கண்காணிக்கபடும் ஆகவே அதே கிராமத்தை சார்ந்த நபர் நானும் அருள்வாக்கு சொல்கிறேன் என்று கூறுவாறேயானால் அதை முதலில் விமர்சிபது பக்கத்துவீட்டுகாரராகத்தான் இருபார்.இதையும் தாண்டி மகேந்திரன் என்ற சாதரண கிராமத்து இளைஞன் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்று அடைமொழியோடு ஆன்மீக நண்பர்களை வசீகரிப்பது இவரின் அருள்வாக்கா(?) பேச்சாற்றலா?



நினைவுகள் தொடரும்...

புதன், ஏப்ரல் 14

ஆம்பலாபட்டு வடக்கு ஆதின முறைக்கு மாறுகிறதா? பாகம் I

அனேகமாக 1987 அல்லது 88 காலகட்டம் என்று நினைக்கிறேன்,பள்ளிகூட மதிய உணவு இடைவேலையில் கருவேல மரநிழல் ஆதரவில் வீட்டிலிருந்து கொண்டுவந்த மோர்சாதத்தையும்,ஊருகாயையும் தொட்டுகொண்டு சாப்பிடும்போது, எங்களுக்கு எதிரே அடர்ந்து!படர்ந்த! ஆல மரம் அதை ஒட்டி ஆலமர நிழலில் புதைந்து காணபடும் பாழடைந்த சிவன் கோயில். இதை பற்றி தினமும் எங்களுக்குள் விவாதம் நடக்கும்.அந்த கோயிலுக்குள் பேய் ஒன்று குடிகொண்டுள்ளது என்றும் அதற்குள் யாரு போனாலும் கொன்று விடுமாம்! என்று தினமும் அந்த கோயிலை பற்றிய இது போன்ற கதைகள் அவரவர் கற்பனைக்கேற்ப கூறபடும்.பின்பு காலமாற்றத்தில் அதே சிவன் கோயில் மதில் சுவர்களிள் ஏறி நின்று கொண்டு எட்டி பார்பது உள்ளே என்ன உள்ளது என்று, ஆனாலும் உள்ளே செல்ல முயற்சிபதில்லை.

பொருள் தேடலின் போது இளைபாரிகொள்ள இரண்டு வருடத்திற்க்கு இரண்டுமாத தவனையில் வரும்போது கண்ட அந்த சிவன் கோயில் மாற்றம் தான் இந்த தலைப்பு.கடவுள் மறுப்போ அல்லது தனி நபர் துதிபாடுதலோ இல்லை.இந்த சிவன் கோயிலின் வெளிபுற மாற்றம் மட்டுமேயெனில் என் கண்களுக்கு தென்பட போவதில்லை,ஆன்மீக நாட்டமுள்ள இளைஞர்களின் ஒருகினைந்தசெயல்பாடு,அற்பனிப்பான உழைப்பு இவைகளின் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகி வருகின்றது. இந்த ஒருகினைப்பை ஏற்படுத்திய பெருமை சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளையே சாரும். யார் இந்த சுவாமிகள்.என் பார்வையில் 2000 வரை மகேந்திரன் என்ற சாதரண இளைஞன் தற்பொது ஆம்பலாபட்டு கிராம எல்லைகளையும் தாண்டி சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்ற அடைமொழியோடு வலம் வருவது வியப்பாக உள்ளது.





இன்றைய நிலையில் சிவன் கோயிலில் நடைபெறுகின்ற வேலையின் மதிப்பு சுமார் நான்கு கோடிக்கு மேல் என்று கூறபடுகிறது. இந்த நிதி என்பது முழுதாக சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகளின் தனிபட்ட திரட்டுதல், இவ்வாறன நிதி மற்றும் ஆன்மீக நம்பிக்கையுடையவர்களின் ஆதரவினை எவ்வாறு பெறமுடிந்தது என்று இயல்பாகவே எல்லோர் மனதிலும் எழும், அதற்கு முன் இந்த சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் அதாவது மகேந்திரன் என்ற வழிகாட்டி நண்பனை பற்றிய எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துகொள்கிறேன்.

மல்லிபட்டிணம் எல்லோருக்கும் அறிந்திருக்கும் இடம் ஏனெனில் இங்கு வரலாற்று சிறப்பிடம் பெற்ற மனோரா உள்ளது. மனோராவை ஒட்டி சின்னமனை என்றொரு கடற்கரை கிராமம் இங்குதான் எனது ஜந்தாம் வகுப்பு தொடக்கம். ஊரில் நாங்கள் சரியாக படிபதில்லையென்றும்,எப்போதும் ஊர் சுற்றுவது என்று பெயர் பெற்றதினால் என்னோடு சேர்த்து இன்னும் சில பால்ய சினேகிதர்களோடு மனோராவை ஒட்டியுள்ள ஹொஸ்டலில் கடும் முயற்சிக்கு (?) பின் சேர்கபடுகின்றோம். எங்களை விட்டு வரும்போது எங்களுடைய பெற்றோர்கள் எங்களோடு சீனியரான ஒருவரை அழைத்து இவனும் நம் ஊர்தான் இனிமேல் இவன் சொல் படி கேட்டு நடக்க வேண்டும் என்று பொருப்பை ஒப்படைத்துவிட்டு கிளம்பிவிடுகின்றனர். அந்த சீனியர் தான் சிவ.ராஜ.மகேந்திர சுவாமிகள் என்கின்ற மகேந்திரன்.

சரியாக ஒரு கல்வியாண்டு கூட முடிகவில்லை,அதோடு எங்களுடைய மல்லிபட்டிணம் ஹொஸ்டல் அனுபவம் முடிந்து விடுகின்றது. அங்கு எங்களோடு சேர்ந்து உண்டு,உறங்கி எங்களை சீனியராக இருந்து கவனித்துகொண்ட மகேந்திரன்தான இது என்று அவரின் சில புகைபடத்தை காணும் போது ஏற்படுகின்றது. மனோராவை ஒட்டி மிக பெரிய தென்னைதோப்பு அதற்குள் இலங்கையில் ஏற்படுகின்ற சிறு மாற்றம்கூட இங்கு சலசப்பை ஏற்படுத்தும் ஏனெனில் அதற்குள் தான் தமிழர்களை உலகறிய செய்த மாவீரர்கள் குடிகொண்டுருந்தனர்.



நினைவுகள் தொடரும்...

வியாழன், மார்ச் 25

வாட்டகுடி இரணியன்,ஆறுமுகம்,சிவராமன் இவர்களின் நினைவுகளை மறக்க கூடிய மனிதர்களாகவா மாறிவிட்டோம்?

ஆங்கில ஆட்சி முடிவுக்கு பின்னர் அதிகார மையம் கைமாரி காங்கிரஸ் வசமான காலகட்டம்.நாட்டின் பெருபாண்மையாக வாழ்கின்ற அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக மாற வேண்டிய அதிகார மையம் தன் சுயரூபத்தை வெளிகாட்டி ஆங்கில அதிகார மையம் கையாண்ட அதே நடைமுறையான பண்ணையார்கள்,ஜமீன்தார்கள் என இவர்களின் நலன்களில் மட்டுமே நாட்டம் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பிக்கின்ற காலகட்டம்.

தஞ்சை மற்றும் அதை சுற்றுயுள்ள பகுதிகளில் மக்களின் ஜீவாதரமான தொழில் விவசாயம் இங்கு கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் விவசாய சங்கம் 1943 -ல் முதலில் திருத்திறைபூண்டியிலும் பின்பு ஆம்பலாப்பட்டிலும் என்று எங்கும் பரவலாக தொடங்கபடுகிறது. ஒடுக்கபட்ட மக்களின் தோழனாக நின்று அவர்களின் நலங்களுக்காக போரடிய கம்யூனிஸ்ட் இயக்கம் 1948 காலகட்டத்தில் தடைசெய்யபடுகிறது. இயக்கம் தடைசெய்யப்பட்டிருப்பினும் மக்கள் படுகின்ற கொடுமைகளை கண்டு தலைமறைவு வாழ்கை வாழ்ந்துகொண்டு அவர்களின் நலங்களுக்காக போரடுகின்றனர். விவசாயி என்று பெயரளவில் தான் இருந்தனர், நிலங்கள் இருந்தும் அதன் ஏகபோக உரிமையாளர்களாக ஜமீன்தாரும் அவர்களின் அடிவருடிகளும் தான் இருந்தனர். தினமும் காலை முதல் மாலைவரை செய்து கிடைக்கின்ற பலன்களில் பங்குதாரர்களாகவும்,உரிமையாளர்களாகவும் இருந்தனர் ஜமீன்தார்கள் மற்றும் அடிவருடிகள்.இந்த இழி நிலையை கண்டு அவர்களின் உரிமையினை பெற்று தர போரடி அதற்காக தன் உயிரையும் இழந்தனர் வாட்டாகுடி இரணியன்,ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் மற்றும் ஜாம்பாவான் ஒடை சிவராமன், இந்த தியாகிகளின் நினைவாக கட்டபட்ட நினைவுதூண் தான் பட்டுகோட்டை நகராட்சியால் இடிக்கபட்டுள்ளது.சாலை போக்குவரத்துக்கு இடைவூறாக இன்றும் எந்தனையோ அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் வழிபாட்டுதளங்கள் என்று எண்ணிலடங்கானவை உள்ளன.ஒவ்வொரு வருடமும் அதற்க்கு மரியாதை செலுத்த சாலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டாடுகின்றவர்களுக்கு இவர்களின் தியாகம் எவ்வாறு புரிந்திருக்கும்.


நவீனமாக்கபடபோகின்ற மயான கொட்டகைக்கு எந்த விதத்திலும் இடையூறு ஆகாத நினைவு தூண் இடிக்கப்ட வேண்டிய அவசியம் ஏன்? தன் முன்னோர்களின் சுயவுரிமை வாழ்வுக்காக போரடியதினால சுட்டுகொள்ளபட்ட இந்த தியாகிகளின் நினைவுகள் தற்போதைய தன் சந்ததிகளுக்கு தேவையில்லை என்று மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதிகள் முடிவெடுத்தனரா?.

என்னை போன்றவர்களுக்கு இன் நிகழ்வு இவ்வறாகத்தான் புரிய வைக்க முயற்சிக்கிறது அன்றைய காலகட்டம் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை தற்போதைய நிகழ்காலம் அவர்களின் தியாகத்தை புரிந்துகொள்ளவில்லை என்றே.


தியாகி ஆம்பல்.ஆறுமுகம் நினைவு தூண்.ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு.


தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுசெயலாளர் (கம்யூனிஸ்ட்) டாக்டர் வே.துரைமாணிக்கம் அவர்கள் ச.சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் 'ஆம்பல் ஆறுமுகம்' என்ற புத்தகத்திற்கு கீழ்வருவன போல் வாழ்த்துரை வழங்கியுள்ளார், அதை இங்கு குறிப்பிடுவது சரியானதாக இருக்கும் என்று கருதி பதிந்துள்ளேன்.


'கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் ஏ.கே.கோபாலன்,மணலி கந்தசாமி,பி.இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் தலைமறைவாக உள்ளனர்.அவர்களை காட்டிகொடுக்க செம்பாளூரை சார்ந்த மிராஸ்தார் ஒருவர் முயற்சி எடுத்தார்.அவரின் முயற்சியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை கடுமையான வழக்காக மாற்றப்பட்டது.அதுதான் செம்பாளுர் வழக்கு.அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் ஆம்பலாப்பட்டசேர்ந்வெ.அ.சுப்பையன்,எஸ்.ஏ.முருகையன்,டி.காசிநாதன்,வாட்டாகுடி இரணியன்,ஆறுமுகம் உள்ளிட்ட பலர்.தேடுதல் வேட்டையில் இரணியனும்,ஆறுமுகமும் வடசேரி என்ற ஊரில்காவல் துறையினரிடம் சம்பந்தம் என்கின்ற சதிகாரன் காட்டிகொடுத்ததால் அகப்பட்டுகொண்டார்கள்.05.05.1950 அன்று அதிகாலை சவுக்கு தோப்பில் மரத்தில் கட்டி வைத்து சிங்கநிகர்த் தோழன் இரணியனை சுட்டு வீழ்த்தினார்கள்.ஆறுமுகத்தை பார்த்து, மணலி கந்தசாமி இருக்கும் இடத்தை சொல்லிவிட்டு ஒடித் தப்பிதுகொள்.உன் மீது வழக்கு இல்லை என்று ஏமாற்றுகிறார்கள்.காக்கி சட்டைகாரர்களின் வஞ்சக எண்ணத்தை புரிந்து கொண்ட ஆறுமுகம், என்னை ஒடச்சொல்லி முதுகில் சுடப்பார்கிறாயா? ஓடினான் சுட்டேன் என்று கதை கட்டிவிட பார்க்கிறாயா? என் தலைவனை காட்டிக் கொடுக்கவும் மாட்டேன், முதுகு காட்டி ஓடவு மாட்டேன்.முதுகில் சூடுபட்டு சாக நான் கோழையல்ல.எனது கட்சிக்கும்,லட்சியத்திற்க்கும் நான் ஏற்றிருக்கும் மார்க்சிய,லெலினிய தத்துவத்திற்கும் இழக்கு ஏற்பட எள் முனையளவும் இடம் தரமாட்டேன்.கூலிப் பட்டாளமே எனது நெஞ்சில் சுடு என்று நெஞ்சை நிமிர்த்து காட்டினார்.துப்பாக்கி குண்டுகள்
நெஞ்சை துலைத்தன.திருமணமாகாத 22 வயதே நிரம்பிய அந்த புறட்சியாளன்,புரட்சி ஓங்குக! என்ற முழக்கத்துடன் பிணமானார்.அவரது உயிர் பிரிக்கபட்டது.அவரது உடல் அழிக்கபட்டது.அவரது லட்சியம் அழியவில்லை.அந்த மாவிரன் தொடங்கிய லட்சிய பயணத்தில் எண்ணற்றவர்கள் அணி வகுத்து நிற்கிறார்கள்.அவர்களில் நானும் ஒருவன்.தியாகி ஆறுமுகம் பிறந்த ஊரில் பிறந்தவன் நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.''


நானும் சொல்லிகொள்வதில் பெருமையடைகிறேன்.

ஞாயிறு, மார்ச் 21

காவேரி


காலம் தவறாத
நுறைகொண்ட
காவேரின் முதல்
துளி கண்ட
என் பாட்டண்
அள்ளிபருகி
ஆனந்தம் கண்டதாக
தந்தையின் பகிர்வு.

மாறிய பருவமும்
மறுக்கின்ற மனித
நேசமும் - அடிக்கொரு
ஆழ்துளை என்றானது.

பிரசவ கால
நினைவுகள்
பெண்களுக்கு
மட்டுமல்ல
என்
உடன்பிறப்புக்கும் தான்,
கலம் கண்ட
கதிர்களை
காணும்பொழுது.

காலம் கடந்தாவது
வந்துவிடு
வருடத்திற்கு
ஒருமுறை
உறிஞ்சப்பட்ட
என்
பூமியை
குளிர்விக்க
தாயே காவேரி.

படம்: இணையதளத்திலிருந்து .

வெள்ளி, மார்ச் 5

பாவிப்பதும் பின்பு பழிப்பதும்...


காவியுடை கதைகள் பல
கேட்டும்,படித்தும்,இப்போது
பார்த்தும்.

இருந்தாலென்ன...
அவமானப்படப்போவது
அடையாளப்படுத்தப்பட்ட
நாமல்லவா.

தினங்கள் மாறும்,
மற்றொருவர் வருவார்
அருள்பாவிப்பார்
கண்டேன் கடவுளை என்று
ஆராதிப்போம்.
பாவம் செய்ய பல வழிகள்,
சேர்த்துகொள்ளுங்கள் அதோடு
காவியுடையையும்.

பாவிப்பதும் பின்பு பழிப்பதும்
இயல்பாய் ஏற்றாகிவிட்டது,

உறைக்கின்ற உண்மைகள்
நடுகல்லாய் நட்டுருக்க,
தேடுங்கள் எதையோ
மனிதத்தை தவிர்த்து.

திங்கள், பிப்ரவரி 8

இறையாண்மை மிக்க நாடா இலங்கை?

பரவலாக எல்லோரலும் எதிர்பார்க்கபட்ட நிகழ்வு தற்போது இலங்கையில் நடைபெற்றுள்ளது.ராஜபக்கியை எப்போது எதிர்க்க தொடங்கினாறோ அன்றே நடைபெற வேண்டியது காலம் தாழ்ந்து நடைபெற்றுயுள்ளது.'என் மீது நடவடிக்கை எடுக்கபடுமானால் ரகசியங்களை வெளியிடுவேன்' என்று கூறிய மாஜி இராணுவ தளபதி தற்பொது தர,தரவென இழுத்துசெல்லப்பட்டு ரகசிய இடத்தில் விசாரனை என்று செய்திகள் வருகின்றன.என்ன மாதிரியான ரகசியமாக இருக்ககூடும்? இறுதி கட்ட போரில் எவ்வாறு மனித உரிமை மீறல் செய்தோம்,மனிதர்களை பல்வேறு விதமான சித்ரவதை செய்து கொன்றது ஹிட்லர் மட்டுமல்ல நாங்களும் தான், என்று மாஜி ராணுவ தளபதி மற்றும் எதிர்கட்சிகளின் அதிபர் வேட்பாளர் கூறுவரேனால் தனது முகதிரை கிழிக்கபட்டுவிடும் உலக அரங்கில் என்றா அரங்கேறியுள்ளது? இல்லை,,,






சிங்கள ஆதிக்க மனோபாண்மை வெளிபடுத்துகின்ற மற்றொரு நிகழ்வுதான் இது என்றே கருதுகின்றேன். இத்தனை நாள் உரிமை கேட்டு போரடிய தமிழனை அழித்தாகிவிட்டது,இனி நான் தான் இங்கே ஹிட்லர் எனவே மற்றொறு ஹிட்லர் தேவையில்லை என்று தன் பங்காளியை ரகசிய இடத்தில் வைத்து விசாரனை(?) செய்து கொண்டு இருக்கின்றார் ராஜபக்கி. இறுதிகட்ட போரில் 'மனித பேரழிவு செய்துகொண்டுள்ளது இலங்கை அரசு' என்று கத்தி,கதறிய தமிழக மக்களுக்கும்,அகதிகளாய் தனது அடையாளங்களை தொலைத்துவிட்டு நிற்கின்ற எனது உறவுகளுக்கும் கூறிய வார்த்தை 'இறையாண்மை மிக்க நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடுவது தவறு' என்று கூறி, இலங்கை அரசின் மனித பேரழிவினை தாய் தமிழகத்தின் மூலமாக உலக அரங்குக்கு எடுத்து செல்வதை தடுத்த இந்திய ஆட்சியாளர்கள் இன்று என்ன சொல்ல போகிறார்கள்?



புதன், பிப்ரவரி 3

ஏமாறுவது அவர்கள் அல்ல...

முன்பெல்லாம் நாம் கேள்விபட்டுருப்போம்.அதாவது மாதம் இருபதாயிரம் சம்பளம் மற்றும் நல்ல கெளரவமான வேலை என்று சொல்லிதான் எனக்கு விசா கொடுத்தார்கள் என்பதாயிரம் வாங்கிகொண்டு,ஆனால் நான் இப்போது பார்பது என்னவோ சில நேரம் கட்டிட வேலை, இல்லையெனில் க்லீனிங்க் வேலை என்று மெத்தபடித்த பலர் புலம்புவதை கேள்விபட்டுருப்போம்.




கடந்த இரு தினங்களாக பஹ்ரைன் செய்திதாளில் இடம்பிடித்து இருக்கும் ஒரு நிகழ்வு. கேரள மாநிலத்தை சார்ந்த ஒரு யுவதி இந்திய தூதரகத்தில் புகார் ஒன்று கொடுத்திருக்கிறார், அதாவது, அதே மாநிலத்தை சார்ந்த ஒருவர் விசாவிர்க்கு நாற்பதாயிரம் பெற்றுகொண்டு, ஒட்டலில் சர்வர் வேலை மாதம் இருபதாயிரம் என்று சொல்லி இங்கு அழைத்து வந்திருக்கின்றார்.இங்கு வந்த பின்புதான் அந்த யுவதிக்கு தான் ஏமாற்றபட்டுள்ளோம் என்று தெரியவருகிறது, மட்டுமல்லாது வலுகட்டாயமாக விபசார தொழிலில் ஈடுபட வற்புறுத்தபட்டு இருக்கிறாள். இதிலிருந்து தப்பிக்க வேறு வழியறியாது இந்திய தூதரகத்தை அனுகி புகார் தெரிவித்து உள்ளார்.தூதரகமும் மேற்கண்ட சம்பவங்கள் குறித்து அந்த கேரள நபரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றது.


படித்த இளைஞர்கள் சில நேரங்களில் கட்டிட வேலை மற்றும் க்லீனிங்க் வேலை செய்தாலும் என்றாவது ஒருநாள் தான் நினைத்ததை சாதிதுவிட முடிகின்றது, அல்லது தனது ஒப்பந்தம் முடிந்த பின்பு நாட்டிற்கு சென்று ஏதாவது செய்து கொள்ளமுடிகிறது(?).ஆனால் பெண்களின் சூழ்நிலை இவ்வாரக பெரும்பாலும் அமைவதில்லை.ஆகவே பெண்கள் வெளிநாட்டு வேலை என்று வரும்போது அனைத்துவிதமான வழிகளிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டிவருகிறது. ஏதோ ஒருவழியில் வெளிநாடு சென்றுவிட்டால் போதுமென்று இந்திய அதிகாரிகளையும்,சட்ட திட்டங்களையும் ஏமாற்றிவிட்டு வருகின்றவர்கள் இங்கு வந்த பின்பு ஏமாறுவது அவர்களாக கூட நேரலாம்.

வியாழன், ஜனவரி 28

'ஹிந்தி'யாகிய நானும் நண்பர் அப்துல் வாகிதும்.

இன்னும் ஒரு வருடம் மற்றும் சில மாதங்களே உள்ளன சட்டமன்ற தேர்தலுக்கு,மைனாரிட்டி அரசு (அதாங்க ஜெயா டிவில் சொல்லுவாங்களே!)ஆட்சி செய்துகொண்டுருக்கும் தி.மு.க வின் தலைவர் தன் ஆட்சி தொடர்ந்திட பல சவால்களை சந்தித்திட நேர்தது,இனமென்றும்,மொழியென்றும் கூறி வந்தவற்றையல்லாம் ஒருவாறு சமாளித்து தொடர்ந்துகொண்டுள்ளார்.ஆனால் செங்கோல் கைமாறும் நிலை தவிர்கமுடியாததாக ஆகிவிடது, ஆகவே அரியாசனத்தில் அமரபோகும் வாரிசுக்கு அறுதிபெருபான்மை என்றொரு...

அரசியல் வேண்டாம் எனவே விசயத்திற்க்கு வருவோம்...


என்னோடு அப்துல் வாகீட் என்ற இன்நாட்டு குடிமகன் பணிபுரிந்து வருகின்றார்.நேற்று மாலை நேரத்தில் மிக உற்சாகத்தோடு காணப்படவரிடம் என்ன விசயம் விசாரித்தேன்.திருமணமாகி மாத ஊதியம் B.D.700 - க்கு குறைவாக பணிபுரிபவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து ஒவ்வொரு
மாதமும் உதவிதொகையாக B.D.50 என்று கடந்த வருடம் அறிவித்து இருந்தார்கள்,நேற்று அந்த வருட பணம் முழுவதுமாக அவருடைய கணக்கில் வரவுவைக்கப்பட்டுருந்ததே அவருடைய உற்சாகத்திற்க்கு காரணம் என்று தெரிவித்தார்.நான் அவரிடம் இது என்ன ஆச்சரியம் எங்கள்
நாட்டில் அரசாங்கத்திடமிருந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வண்ண தொலைகாட்சி பெட்டி மற்றும் இலவச அரிசி இது போல் இன்னும் ஏராளம் என்றேன் அப்பாவியாய்,அவர் கேட்க போகும் கேள்வியரியாது.


இருமுறை இந்தியா வந்து போனவர் நமது அப்துல் வாகீட்,கோவா மற்றும் மும்பை
போன்ற நகரங்களுக்கு (தப்பித்தேன் சென்னை வரவில்லை).அவர் சென்ற இடங்களில் எல்லாம்
பிச்சைகாரர்களும்,வயதானவர்களும் மற்றும் ஊனமுற்றோர்களும் சிக்னல்,ரோடு,ஒட்டல் வாசல் போன்ற இடங்களில் மிக பெருபான்மையாக பிச்சை எடுத்துகொண்டுப்பதை பார்திருக்கின்றார். 'இவ்வளவு நபர்கள் கவனிப்பாரன்றி தெருக்களில் பிச்சை எடுத்துகொண்டும்.வாழ்விடங்களை கூட
சரியான முறையில் அமைத்துக்கொள்ளமுடியாத மக்கள் வாழ்கின்ற நாட்டில்,சராசரி வாழ்கை நடத்தும் குடிமக்களுக்கு ஏன் இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி,அரிசி போன்ற இலவசங்கள்' என்றார்.தொடர்ந்து ஒவ்வொரு விடுமுறைக்கும் ஏதவொரு நாட்டிற்கு சென்று வருவராம், அங்கெல்லாம் காணமுடியாத சாலை இடர்பாடுகள் இந்தியாவில் அதிகம் ஆகவே 'இவ்வளவு தேவைகள் இருக்கும் போது ஏன் உங்கள் அரசாங்கம் இலவசமாக வாரி வழங்குகிறது' என்றார்.எனக்கு ஏன் இவரிடத்தில் கேள்வி கேட்டோம் என்றாகிவிடது.எப்பொதும் அதிக பேசமாட்டார் ஆனால் இன்று எங்கிருந்து வந்தது தெரியவில்லை மனிதர் ஆச்சரியபடவைத்துவிட்டார்.


அவர் என்னை ஒரு 'ஹிந்தி'யனாக மட்டுமே பார்த்தார்,(ஹிந்தி என்பது பொதுவாக இந்தியர்களை குறிப்பிடும் சொல் இங்கே)ஆகவே நான் அப்பாவிதமாக அவரிடத்தில் சொல்ல,அவர் சந்தித்த மும்பை மற்றும் கோவா அனுவங்களையும் இணைத்து என்னை பதில் சொல்லமுடியாத இக்கட்டான நிலைக்கு உட்படுத்தி விட்டார்.


மக்களை இலவசம் மட்டுமே எதிர்பார்த்து காத்துருக்கின்ற வாக்கு சீட்டு அரசியல் தான் இவர்களின் திட்டங்களில் மேலோங்கி
நிற்கிறதே தவிர,ஒரு வளமையான சமுக கட்டமைப்பை உருவாக்குவதில் இவர்களின் திட்டங்களில் இருப்பதாக தெரியவில்லை



மன்னராட்சி குடிமக்களை கெளரவமான முறையில் வாழ வைக்கிறது.மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு குடிமக்களை கூனிகுறிகி கையேந்த வைக்க முயல்கிறது.
-----------
படம்: சென்னையை சார்ந்த இனையதள படங்கள்.
-------------------------------------------------------------

மற்றும் இனையதள பிரபலங்கள் இலவசம் பற்றி எழுதிய கருத்துக்களையும்,கவிதைகளையும் கீழே இணைத்துள்ளேன்.

தினமனி தலையங்கம்: தகுதியானதா;தகுதியற்றதா.

தினமனி தலையங்கம்: நனவாகும் கனவுகள்

திருமதி.ராமலக்ஷ்மி(blog) : இல்லத்தாரும் இலவசங்களும்...

திரு.சஞ்சைகாந்தி (blog) : இலவச திட்டம் யாருக்கு பயன்.

புதன், ஜனவரி 20

சாகித்திய அக்காடெமி விருதுபெற்ற 'கோபல்லபுரத்து மக்கள்' (1991) பாகம் II - என் பார்வை.

முதல் பாகம் முழுவதும் தமிழக பகுதிகளில் குடியேறி வசித்து வந்த தெழுங்கு பேசும் மக்களின் கலாச்சாரங்களை காதல்,நகைசுவை,என்று பல்சுவையோடு தருகின்ற திரு. கி.ராஜ நாரயணன் அவர்கள் தனது இரண்டாம் பாகத்தில்,முழுவதும் சுதந்திர போரட்டம் உச்ச கட்டத்திலிருந்து தொடங்கி சுதந்திரம் பெருகின்ற கடைசி நாள் வரை, நடைபெருகின்ற சம்பவங்களை அலசுகின்ற ஒரு அரசியல் நாவலாகத்தான் எழுதியுள்ளார் என்றே கருதுகின்றேன்.இந்திய தேசிய விடுதலை போரடத்தில்,காந்திய கொள்கைகலிருந்து மாறுபட்டு நின்று அதற்காக தனக்கென ஒரு வழியை ஏற்படுத்தி கொண்டு போரடிய சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் போரட்டங்களையும் விவரித்துள்ளார் ஆசிரியர்.


இரண்டாம் உலக போருக்கு பின்பு,உலக அரசியலில் ஏற்பட்ட மாறுதலினால் தன் காலனி நாடுகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் ஏற்படுகின்ற பின்னடைவுகளாலும்,இந்திய தேசிய சுதந்திர போரட்டம் மொழி,இனம் மற்றும் எல்லை கடந்து இந்திய துணை கண்டம் முழுவதும் சாதரண குடிமகனையும் சுதந்திரம் தாகம் ஆட்கொள்வதாலும்,ஆங்கில அதிகார மையம் இனி இங்கு தொடருவதில் சிக்கல் என்றே நினைத்து மறுபரிசிலனை செய்திருக்கலாம்,நிலமை இவ்வாற இருக்க காங்கிரஸ் இயக்கம் மட்டுமே இந்திய தேசிய விடுதலை போரட்டத்தினை, முழுவதுமாக தன் வசமாக்கி அதை காலம் காலமாக சுதந்திர இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க கொள்ள முயல்கிறது,வெற்றியும் பெற்று வருகின்றது.மட்டுமல்லாது ஒரு குடும்பத்திற்காகவே இந்திய நாட்டின் உச்ச அதிகார மையம் காத்திருப்பது போலவும்,அதற்காக ஒவ்வொறு தலைமுறையிலும் ஒரு தலைவன் உருவாக்கபடுவதும் ஆச்சரியபடவைக்கிறது. பிரிட்டிஷ் இந்திய சுதந்திரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு சுதந்திர இந்தியாவின் அதிகாரம் மையம் மாற்றபடும்போது அதை மூன்றாக பிரித்து தலா காங்கிரஸ் 40%,முஸ்ஸிம் லீக் 40% மற்றும் மற்ற கட்சிகளுக்கு (கம்யூனிஸ்ட் ? ) 20% என்று பிரித்து தருமாறு கேட்பதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார்,இதிலிருந்து அறிய முடிகிறது காங்கிரஸ் மட்டுமே இந்திய சுதந்திர விடுதலை போரட்டத்தினை தன் வசமாக்கியுள்ளது.இடதுசாரி சிந்தனைகளோடு இந்திய விடுதலை போரட்டத்தில் பங்குகொண்ட எத்தனை தலைவர்களை வரலாறு நமக்கு சொல்லிகொடுத்துள்ளது,நில சுவான்தார்கள் மற்றும் ஜமீன்தார்கள் அடையாளமாக திகழ்ந்த காங்கிரஸ் இயக்கம் இன்றும் வேறுவடிவில் அதைதான் பின்பற்றுகிறது.ஆனால் ஆரம்பம்முதல் அடிதட்டு மக்களின் தோழனாக நின்று அவர்களோடு இணைந்து போரடிய காங்கிரஸ் அல்லாத இயக்கத்தவர்களை எத்தனை பேருக்கு இன்று தெரியும்?.


அகிம்சா வழியில் போரடமல் மாற்று சிந்தனைகளோடு சுதந்திரத்திற்கு போரடி ஆங்கில அதிகாரத்திடம் மண்டியிட மறுத்து உயிர் துறந்த போது அவர்களுக்கு எழுகின்ற மக்கள் ஆதரவினை எவ்வாறு தமக்கு சாதகமாக மாற்றிகொண்டனர் என்று கதாபாத்திரங்கள் வழியே நமக்கு உணர்துகின்றார் ஆசிரியர்.உதரணமாக பெஷாவர் கூர்க்கா படை,கப்பற் படை வீரர்களின் எழுச்சி மற்றும் பகத் சிங் போன்றோர்களை குறிப்பிடலாம்.


இரண்டாம் உலக போரில் சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் இந்திய தேசிய இராணுவம்,பிரிட்டனுக்கு எதிரான அணிகளோடு இணைந்து இந்திய விடுதலைக்கு வெளியிலிருந்து போரடும் போது ஜெர்மனுக்கு ஆதரவான நிலை நம் மக்களிடம் தோன்றியதையும்,பின்பு அதே ஜெர்மன் மக்கள் சர்வாதிகார அரசிடம்(சோவித் ரஷ்யா) மல்லுக்கு நின்றபோது வெறுக்கின்றதை சுட்டி காட்டியுள்ளார் ஆசிரியர்.இந்த நிலை ரஷ்யாவின் எழுச்சி உலக அடிதட்டு மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது என்பதில் மாச்சரியம்யில்லை.



இருதியாக, ஆசிரியர் தன் கடைசியாக பக்கத்தில் இவ்வாறக குறிப்பிடுகின்றார்...



''பாபுஜி,தேசத்துக்கு சுதந்திரம் வந்துவிட்டது.தேசமே மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கிறது.நீங்கள் மெளனமாக நூல் நூற்றுக் கொண்டிருக்கிறீர்கள்.ஒரு செய்தி சொல்லவேண்டும்''. என்று பத்திரிகை நிருபர்கள் கேட்டு நின்றார்கள்.


பதிலே சொல்லலையாம்;அவர்பாட்டுக்கு ''விர் விர்" என்று நூல் நூற்றுகொண்டுருந்தாராம்.திரும்பவும் பத்திரிகை நிருபர்கள் அதே கேள்வியை காந்திஜியிடம் கேட்டார்களாம்.


ராட்டை சுற்றுவதை நிறுத்தினாராம்.நிருபர்களை பார்த்தாராம்.என்னசொல்லுவாரோ என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிருபர்களுக்கும் தேசத்துக்கும் அவர் சொன்ன ஒரே வார்த்தை:


"ஒண்ணுமில்லை"


சொல்லிவிட்டு முன்னிலும் வேகமாக நூற்கஆரம்பித்துவிட்டாராம்.சுதந்திரத்தைப்பற்றி கல்கத்தாவில் காந்திஜி சொன்ன வார்த்தை கோபல்ல புரத்திலும் வந்து எதிரொலித்தது.

"ஒண்ணுமில்லை"
"ஒண்ணுமில்லை"
"ஒண்ணுமில்லை"


அன்னமய்யா அந்த வார்த்தையை தனக்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டான்.

-------

எந்த ஒரு படைப்பும் படைபாளிகளின் கருத்துக்களில் மேல் மட்டும் நின்றுவிடாமல்,வாசிப்பாளனிடம் மாறுபட்ட சிந்தனையை ஏற்படுத்துகின்றதோ அது ஒரு சிறந்த படைப்பு என்ற அடிப்படையில் திரு.கி.ராஜ நாரயணன் அவர்களின் நாவல் வாயிலாக என் கருத்துக்களை பதித்துள்ளேன்.வாய்ப்பிருப்பின் வாங்கி படியுங்கள்.

வெள்ளி, ஜனவரி 15

தமிழர் திருநாள் கொண்டாட்டம் பஹ்ரைன்,இடம் இந்தியன் கிளப்.15.01.2010

இதுதாங்க இந்தியன் கிளப் பஹ்ரைன்.
என்னமா வேடிக்கை பாக்கறாங்க மகளிர் (கொஞ்சம் திரும்பி சிரிச்சிருக்கலாம்)

கயிறு இழுத்தல் போட்டி (குயிலாட்டம்,கரகாட்டம் மற்றும் பல நிகழ்சிகள் நாங்க போறத்துக்கு
முன்னாடியே முடிஞ்சி போச்சு)

ரொம்ப நன்றிங்க வாழ இலை சாப்பாட்டுக்கு( ஆனா இது முடியல நாங்க போறத்துக்கு முன்னாடி)

ஒவ்வொறு வருடமும் தமிழர் திருநாள் நிகழ்சியினை ஒருகினைத்து
நடத்திகொண்டுருக்கும்

பாரதி தமிழ்சங்கம் பஹ்ரைன் நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

புதன், ஜனவரி 13

பொங்கல் வாழ்த்து


குருவை,சம்பா,தாளடி
என்றன மாறி
ஒருபோகமே ஒசத்தி
என்றாயினும்,
வீடு வருவது
என்னவோ
வெறுங்கையோடுதான்
விவசாயி.

என் விவசாய தொழில் சார்ந்த உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்,எழுத்துக்களால் அறிமுகமாகிய புதிய வலைபூ நண்பர்களுக்கும் என் உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

சனி, ஜனவரி 9

சாகித்திய அக்காடெமி விருதுபெற்ற 'கோபல்லபுரத்து மக்கள்' (1991) பாகம் I - என் பார்வை.

சாகித்திய அக்காடெமி விருது பெற்ற திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் 'கோபல்லபுரத்து மக்கள்' என்ற நாவலை சமிபத்தில் படித்து முடித்தேன்.கிராமத்து மக்களின் பேச்சு வழக்கிலேயே நாவல் முழுவதும் எழுதி முடித்திருப்பார்.விஜய நகர பேரரசு வீழ்ச்சிக்கு பின்னர் ஏற்பட்ட நெருக்கடிகளை தொடர்ந்து தமிழக பகுதிகளில் குடியேறி வசிக்க தொடங்கிய தெழுங்கு மொழியை தாய் மொழியாக கொண்டு வாழ்ந்து வந்த மக்களின் கலாச்சாரங்களையும்,பழக்க வழக்கங்களையும் நம் கண் முன்னே நிறுத்தி இருப்பார் திரு.கி.ராஜநாராயணன்.

மக்களின் நம்பிக்கைகளையும்,தொன்றுதொட்டு கடைபிடித்துவரும் கலாச்சாரத்தையும் புதிய வரவுகளான டார்ச் லைட்,மண்ணெண்ணை,தேயிலை தூள்,புகை வண்டி, இதுபோன்ற புதிய வரவுகள் எவ்வாறு மாற்றி அமைத்தன என்பதை கதையின் ஊடே நகைசுவையோடு நம்மை அந்த காலத்திற்கே கொண்டு செல்வார்.நாவலில் பல கதாபாத்திரங்கள் நம்மை பாதிப்பினும் குறிப்பாக கிட்டன்,அச்சிந்த்தலு மற்றும் காரி என்கின்ற கோயில் மாடும். கிட்டன்,அச்சிந்த்தலு சந்தித்து கொள்கின்ற கடைசி அத்தியாயம் கொஞ்சம் மிகைபடுத்தப்பட்டதாக உள்ளது,இருப்பினும் வருடங்களாகி போன பிரிதலுக்கு பின் சந்திக்கின்ற காதலர்களுக்கு கண்ணிர் துளி கூட அமிர்தமே, பின்பு ஏன் கிட்டனின் தாகத்தினை அச்சிந்த்தலுவின் உமிழ்நீர் தீர்க்காது?

பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் கோயில் மாடு என்பது அனேக கிராமங்களில் சர்வ சாதரணம்,விவசாய நிலங்கலில் கோயில் மாடு மேய்கின்ற போது அதை விரட்ட திராணியற்று, பின்பு வீட்டல் வந்து அதை நான் தான் விரட்டி விட்டேன் என்று பெருமையாக கூறுவது உண்டு,ஆனால் இன்றைய நிலை கோயில் மாடு என்பது அரிதாகி போன ஒரு சொல்லாகி விட்டது.யாரெனும் நேந்துவிட்டாலும் அதை விற்று காசு பண்ணுகின்ற நிலைக்கு கோயில் நிர்வாகமும் மற்றும் புதிய மருத்துவ வரத்துக்களாலும் கோயில் மாடுகளின் தேவையென்பது மக்களுக்கு அவசியமில்லை என்ற நிலையும் வந்தாகிவிட்டது.கடவுளின் பெயரால் மக்களின் நலன் சார்ந்த விசயங்கலாக எவ்வாறு மக்களின் கலாச்சாரத்தோடு இணைந்து பின்பு புதிய வரவுகளின் தாக்கத்தினால் அது தன் நிலையை மாற்றி கொள்கிறது என்பதை காரி உணர்தி செல்கிறது. சரி கடைசியா காரியை மனசுல வச்சு ஒரு கவிதை வ(க)டித்துள்ளேன் அதையும் கொஞ்சம் படிச்சிடுங்க.
-------------------------------------------------------------------
வருடத்திற்குகொருமுறை வர்ணம்
பூசிகொள்ளும் ஊர் ஒரத்து
அய்யனாருக்கு அருகில்.

கலவில்லா கருத்தரிப்பு எங்கள்
மந்தையில் மரபு விதையை
மறுத்துவிட்டது .

தொழுவத்தில் தினிக்கப்பட்டு ஈன்று
நுகர்ந்து ஏற்றாகிவிட்டது தாய்மை
தீண்டல் அன்றி.

புதிய வரவுகளின் புரிதலாய்
வேண்டாமாகி போனது
செவலை அய்யனாருக்கு.

அடுத்த முறை வேண்டிகொள்வோம்
அதோடு போகட்டுமென்று.
------------------------------------------------------------------

மீண்டும் திரு.கி.ராஜநாராயணன் அவர்களின் 'கோபல்லபுரத்து மக்கள்' இரண்டாம் பாகத்தோடு.
(இதை சொல்றத்துக்கே ரூம் போட்டு யோசிக்கனும் போல்ருக்கு,எப்படிதான் டெய்லி எழுதுறாங்களோ இடுக்கையிலே!)